கோவில் அறங்காவலர்கள், தக்கார் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
கோவில் அறங்காவலர்கள், தக்கார் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
ADDED : ஜூன் 26, 2026 05:06 AM

திருச்சி: கோவில்களில் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள், தக்கார் ஆகியோர் சட்டப்படி சுதந்திரமாக செயல்பட, ஹிந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 44,000 கோவில்கள், திருமடங்கள், அதனுடன் இணைந்த கோவில்கள், அறக்கட்டளைகள், சமண கோவில்கள், உபகோவில்கள் உள்ளன.
இவற்றில், 331 கோவில்கள் பிரதானமானவை. ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம். தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மேலும், 48 கோவில்கள் வரலாற்று பிரசித்தி பெற்றவை.
ஒப்புதல்
அறநிலையத்துறை சட்டப்படி, அறங்காவலர்கள் அல்லது அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் கோவில்களின் தக்கார் பொறுப்பில் இருப்பவர்கள் கோவிலை முழுமையாக நிர்வகிக்க வேண்டும்.
கோவில் வருமானம், பக்தர்களுக்கான வசதி, செலவினங்கள், சொத்துக்களை பாதுகாத்தல், கோவில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிமுகப்படுத்துதல், திருப்பணி வேலைகளை முன் நின்று கவனித்தல் உள்ளிட்டவை அறங்காவலர்கள், தக்கார் பொறுப்பில் இருப்பவர்களின் பணி.
ஊழியர்களை நிர்வாகம் செய்தல், கோவிலுக்கான வரிகள் செலுத்துதல், வாடகை வசூலித்தல், கோவில் வளாகத்தில் பிரசாதம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை கண்காணித்தல் உள்ளிட்ட அன்றாட பணிகளை மேலாண்மை செய்வது, அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட கோவில் அலுவலர்கள், ஊழியர்களின் பொறுப்பு.
ஆனால், 60 ஆண்டு கால திராவிட கட்சி களின் ஆட்சியில், கோவில்களை முழுமையாக நிர்வகிப்பது, முடிவெடுப்பது அனைத்தும், அறநிலையத்துறை தான் என்ற நிலைக்கு கொண்டு சென்றனர். இதனால், முதுநிலை கோவில்களுக்கு தேவையான எதுவானாலும், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிள் ஒப்புதல் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
உதாரணமாக, கோவிலுக்கு நான்கு காவலாளி பணியாளர்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட கோவிலை நிர்வகிக்கும் துணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனர், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவார்.
அக்கடிதத்தை உயரதிகாரிகள் நேரடியாக பார்த்து பரிசீலிப்பது இல்லை. அவர்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர், அந்த கோரிக்கையை படித்து பார்த்து, 'இரு காவலாளிகள் போதும், ஒருவர் போதும்' என, முடிவு செய்து குறிப்பு எழுதி வைப்பார்.
விநோதம்
அதன்படி, 'இருவர் போதும், ஒருவர் போதும்' என்ற ஒப்புதலுடன், உயர் அதிகாரிகளால் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில் துணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனருக்கே திரும்ப வரும்.
அதாவது, கோவிலை நிர்வகிக்கும் துணை கமிஷனர், உதவி கமிஷனரின் அதிகார அந்தஸ்தைவிடவும் குறைவான அந்தஸ்தில் பணியாற்றும் அலுவலக கண்காணிப்பாளரே முடிவுகளை மேற்கொள்கிறார் என்பது தான் இங்கு விநோதம்.இவருக்கு கோவிலின் அடிப்படை தேவைகள் குறித்த விபரங்கள் ஏதும் தெரியாது என்பதே உண்மை.
இதன் காரணமாக, கடந்த தி.மு.க., ஆட்சியில், கோவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அதிகரித்தன. தகுதியற்ற நபர்கள், தற்காலிக பணி என்ற அடிப்படையில் கோவில்களில் தொகுப்பூதிய அடிப்படையில், ஆளுங்கட்சியினர் சிபாரிசில் நியமிக்கப்பட்டனர்.
தற்போது பெரும்பாலான கோவில்களில், சோலார் பேனல்கள், குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன. பழுது ஏற்பட்டால் கூட சரி செய்ய தகுதியான ஊழியர் இல்லை.
அதேபோன்று, கோவிலில் தினமும் வேதபாராயணம் செய்யும் குருக்களுக்கு, மாதம் குறை ந்தபட்சம், 10,000 ரூபாய் வழங்க, கோவில் நிர்வாகம் தரப்பில், அனுமதி கேட்டு, அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பினால், நடைமுறை சாத்தியமே இல்லாதவாறு, மாதம், 2,000 ரூபாய் மட்டும் ஊதியம் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
வைதீக காரியங்களுக்கு செல்வோர் நாள் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் மாதம், 2,000 ரூபாய் ஊதியத்துக்கு யார் வருவார்?
அதுமட்டுமின்றி, கோவில்களில் சுவாமிக்கு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியில், நைவேத்யம் தயாரிக்கும் ஊழியருக்கு, 8,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
திணறல்
இது எந்த அடிப்படையில் என தெரியவில்லை. தற்போதைய சூழலில் இவ்வளவு குறைவான ஊதியத்துக்கு பணியாற்ற யார் முன்வருவர்?
இவ்வாறான காரணங்களா ல், கோவில்களில் அன்றாட பணிகள், திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் அறங்காவலர்கள், தக்கார், அதிகாரிகள் திணறுகின்றனர்.
எனவே, கோவில் நிர்வாகமே, அத்தியாவசிய, அவசர தேவைகளின் போது, 'அவுட் சோர்ஸ்' முறையில் ஊழியர்களை நியமித்துக்கொள்ள, அரசு அனுமதிப்பது அவசியம்.
மேற்கண்ட நடைமுறை குறைபாடுகளை சரிசெய்வதுடன், கோவில் அறங்காவலர்கள், தக்கார் ஆகியோர் சுதந்திரமாக செயல்பட, தமிழக அரசு, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விரைந்து நடவடிக்கை எடுத்தால் , கோவில்களின் நிர்வாகம் மேம்படும்; அமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என, நம்புவோம்.
