கூட்டணிக்கு வராவிட்டால் தேமுதிக உடைப்பு: பழனிசாமி, நயினார் வியூகம்
கூட்டணிக்கு வராவிட்டால் தேமுதிக உடைப்பு: பழனிசாமி, நயினார் வியூகம்
UPDATED : பிப் 02, 2026 10:36 AM
ADDED : பிப் 02, 2026 05:38 AM

சென்னை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தே.மு.தி.க., வர மறுத்தால், அக்கட்சியை உடைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபைக்கு, ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க.,வில் கூட்டணி பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்க்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் மதுராந்தகத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டணி கட்சி பொதுக் கூட்டத்தில், தே.மு.தி.க., நிர்வாகிகளை மேடை ஏற்ற, தீவிரமாக பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, அக்கட்சிக்கு எட்டு தொகுதிகள் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், தே.மு.தி.க., தரப்பில் 16 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.
இந்த கோரிக்கையை, அ.தி.மு .க., - பா.ஜ., தலைமைகள் நிராகரித்து விட்டன. அதை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி வாயிலாக, பிரேமலதா விடம் நேரடியாக பேசப்பட்டது.
அப்போது, ஆறு சட்டசபை தொகுதிகள் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றி பெற்றால், ராஜ்யசபா சீட் தருவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், ராஜ்யசபா சீட் கேட்டு, தே.மு.தி.க., பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால், தி.மு.க.,வுடனான கூட்டணி பேச்சும் இழுபறியாக உள்ளது.
இந்நிலையில், கூட்டணிக்கு வராவிட்டால், அக்கட்சியை உடைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி இளங்கோவன் வாயிலாக, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகளிடம் பேசி, அதிர வைக்கும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
அதேபோல, கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தின்போது, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷை சந்தித்து பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது, தே.மு.தி.க.,வினர் ஒன்றாக இருந்து செயல்படுவதையே பா.ஜ., விரும்புகிறது என கூறி அதிர வைத்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.

