தனுஷ்கோடி துறைமுக நகரம் மீண்டும் வர்த்தக நகராகுமா
தனுஷ்கோடி துறைமுக நகரம் மீண்டும் வர்த்தக நகராகுமா
UPDATED : ஜன 16, 2024 01:09 AM
ADDED : ஜன 16, 2024 01:06 AM

ராமநாதபுரம் : ஆழிப்பேரலையால் அழிந்து போன தனுஷ்கோடி துறைமுக நகரத்தை மீண்டும் வர்த்தக வளம் கொழிக்கும் நகரமாக மாற்ற வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கும், சுதந்திரத்திற்கு பின் இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகரமாக விளங்கியது தனுஷ்கோடி. விமான சேவைகள் மேம்படாத காலத்தில் பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற தொழிலாளர்களுக்கான எளிய கடல் வழித்தடமாகவும் இருந்தது தனுஷ்கோடி.
இலங்கையை பொன் விளையும் பூமியாக மாற்றுவதற்காக ஆயிரமாயிரம் இந்தியர்களை இலங்கைக்குக் கொண்டு செல்லத் துணையாக இருந்ததும் இந்த தனுஷ்கோடி துறைமுகம் தான்.
![]() |
வளமும் அழகும் மிகுந்த தனுஷ்கோடி துறைமுக நகரத்தை ஒரே இரவில் புரட்டி போட்டது ஆழிப்பேரலை. 1964- டிச.23- இரவில் உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஜல சமாதி ஆக்கியது அந்த கோரப் புயல்.
இலங்கை வழியாக வலுப்பெற்று வந்த புயல் துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது.
![]() |
தனுஷ்கோடி ரயில் நிலையம், துறைமுகம், அரசு அலுவலகங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்களோடு விலைமதிப்பு இல்லாத நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கடலுக்குள் போனது.
பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற ரயிலையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் பயணித்த கல்லுாரி மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்
ஆழிப்பேரலைக்குப் பின் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது தனுஷ்கோடி. அன்றிலிருந்து மக்கள் நடமாட்டம் இன்றி இருந்து வந்த தனுஷ்கோடி சில ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலா தலமாக மாறியது.
![]() |
கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, சோலார் மின் விளக்கு வசதி என மெல்ல மெல்ல உயிர்ப்பெற்று வரும் தனுஷ்கோடியில் புயலில் அழிந்தது போக எஞ்சிய நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படாமல் கிடக்கிறது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் புயலின் எச்சமாக நின்ற கட்டட இடிபாடுகளைத் தனுஷ்கோடிக்கு சென்று பார்த்து வியந்து செல்கின்றனர்.
இந்த இடிபாடுகளில் இன்றும் எஞ்சியிருப்பது சர்ச், விநாயகர் கோயில், அஞ்சலக கட்டடம், ரயில் நிலைய கட்டடம் உள்ளிட்ட சில மட்டும் தான். இந்த அடையாள சின்னங்கள் வருடங்கள் செல்ல செல்ல மேலும் சிதிலமடைகின்றன.
ரூ.70 கோடிக்கும் மேல் செலவு செய்து தனுஷ்கோடிக்கு சாலை அமைத்துள்ளது மத்திய அரசு. அதே நேரத்தில் தனுஷ்கோடியில் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் புயல் அடையாளச் சின்னங்களை பாதுகாக்கும் பணிகளில் கவனம் செலுத்தவில்லை.
ராமேஸ்வரம் கோயிலையும் தனுஷ்கோடியையும் நம்பி பல நுாறு சிறு வியாபாரிகளும் அவர்களோடு இணைந்த குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.
எனவே நாட்டின் தென் கடலோர பகுதியான தனுஷ்கோடியை சிறப்பு மிக்க சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். தனுஷ்கோடியில் துறைமுகத்தை மேம்படுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றை துவங்கி அந்த நகரை மீண்டும் வளம் கொழிக்க செய்ய வேண்டும் என்பதே அப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.