உதயநிதி துணை முதல்வரானால் தக்காளி விலை குறையுமா: உதயகுமார்
உதயநிதி துணை முதல்வரானால் தக்காளி விலை குறையுமா: உதயகுமார்
ADDED : செப் 23, 2024 02:46 AM

மதுரை வாடிப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை மேடையில் உட்கார வைக்கிறார். தி.மு.க.,வுக்காக காலமெல்லாம் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்களையெல்லாம் எதிரில் கீழே உட்கார வைப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.
உங்களுக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக உதயநிதியை துணை முதல்வராக்கி அழகு பார்க்க நினைப்பதெல்லாம், ஸ்டாலினுக்கே கொஞ்சம் கூடுதலாகத் தெரியவில்லையா?
அப்படித்தான் செய்வேன் என்று கூறினால், அதற்கு சர்வாதிகாரம் என்று தான் பெயர்.
மூச்சுக்கு முன்னுாறு முறை அண்ணாதுரையின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லும் ஸ்டாலின், அவரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஓட்டு கேட்டு செல்லும் போதும், தேர்தல் அறிக்கையிலும் உதயநிதியை அமைச்சர் ஆக்குவோம் என்று எங்கும் சொல்லவில்லை. இப்படித்தான், சொல்லாததை செய்வது; சொன்னதை செய்வதில்லை என்ற குறிக்கோளோடு செயல்படும் முதல்வர் ஸ்டாலின், ஓட்டு கேட்கும் போது மட்டும், அதற்கு மாறாகச் சொல்லி தன்னையே புகழ்ந்து கொள்வார்.
மக்கள் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஸ்டாலினுக்கு, வரும் காலங்களில் நல்ல அடி கிடைக்கும்.
உதயநிதி துணை முதல்வராகி விட்டால், தமிழகத்தில் குறைந்தபட்சம் தக்காளி விலையாவது குறையுமா?
இவ்வாறு அவர் பேசினார்
-நமது நிருபர் -.