தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடம் குறையும்?
தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடம் குறையும்?
UPDATED : மே 15, 2025 05:03 AM
ADDED : மே 15, 2025 12:58 AM

சென்னை: சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை முடிந்துள்ளதால், தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறைக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் ரயில்வே கனவு திட்டமான, சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணி, 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, மதுரை -- திருநெல்வேலி -- நாகர்கோவில் -- கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டது.
இதனால், தென் மாவட்ட விரைவு ரயில்களின் தாமதம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூடுதல் ரயில்கள் இயக்கம், பயண நேரம் குறைப்பு போன்ற அறிவிப்புகளை, இன்னும் தெற்கு ரயில்வே வெளியிடவில்லை.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்டவணை தயாரிப்பு பணியை துவங்கி உள்ளோம். கூடுதல் ரயில்கள் இயக்கம், ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் குறித்து, பயணியர் சங்கங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் குறித்து, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, புதிய கால அட்டவணையில் அறிவிப்புகள் வெளியிடப்படும். குறிப்பாக, தென் மாவட்ட இரட்டை பாதையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதால், ரயில்களின் வேகம் சற்று அதிகரிக்கப்படும்.
இதனால், பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறையும். இதற்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடவுள்ள புதிய கால அட்டவணையில் இடம்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.