'தக் லைப்' படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்: விஜய் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுமா?
'தக் லைப்' படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்: விஜய் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுமா?
UPDATED : ஜூன் 06, 2025 06:49 AM
ADDED : ஜூன் 06, 2025 02:07 AM

கோவை: தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழகத்தில், ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டின் போது சிக்கல் ஏற்படுத்த இப்போதே திட்டமிடுகின்றனர்.
தக் லைப் இசை வெளியிட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல், 'தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என்றார். இது கர்நாடகாவில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. நடிகர் கமல் மன்னிப்பு கேட்கும் வரை, தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என, அரசியல் கட்சித் தலைவர்களும், கன்னட மொழி ஆர்வலர்களும் சூளுரைத்தனர்.
இதையடுத்து, படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விவகாரம் அம்மாநில உயர் நீதிமன்றத்துக்கு சென்றது. அங்கும், நடிகர் கமலை மன்னிப்பு கேட்க வலியுறுத்தவே, படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியவில்லை.
கர்நாடக பிலிம் சேம்பருக்கு, நடிகர் கமல் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்த பின்பும், அங்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதால், இவ்விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என புரியாமல் பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தாரும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தப் படத்துக்கு, தமிழகத்தில் சிக்கல் ஏற்படுமோ என்ற பதற்றம் தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ளது.
அந்த படத்துக்கு எப்படி பிரச்னை ஏற்படும் என கேட்டால், தமிழ் திரையுலகில் விநோத காரணம் சொல்கின்றனர்.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:
நடிகர் விஜயின், 69வது படம் ஜனநாயகன். இப்படத்தை தயாரித்து வரும் கே.வி.என்., புரொடெக்ஷன், கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம்.
கன்னட மொழி குறித்து நடிகர் கமலின் பேச்சுக்குப் பின், தக் லைப் திரைப்படம், கர்நாடகாவில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பெங்களூரை களமாக கொண்ட ஒரு திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தமிழில் தயாரிக்கும் படத்தை, தமிழகத்தில் வெளியிடலாமா என, இப்போதே சிலர் சர்ச்சை கிளப்பத் துவங்கி விட்டனர். இந்த சர்ச்சைக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூடவே, நடிகர் விஜய்க்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சியினரும், இந்த சர்ச்சையை பெரிதாக்க முயல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'இப்படியொரு சர்ச்சையை கிளப்பி யார் அரசியல் செய்ய நினைத்தாலும், அது அவர்களுக்கு எதிராகப் போய் முடியும். அப்படி நடந்தால், அரசியல் ரீதியில் அதை தனக்கு சாதகமாக திருப்ப, விஜய் தரப்பிலும் சில யோசனைகள் உள்ளன' என்றனர்.