த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா?: ஸ்டாலின் சந்தேகம்
த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா?: ஸ்டாலின் சந்தேகம்
ADDED : ஜூன் 08, 2026 05:04 AM

சென்னை: ''தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, மூன்று மாதங்களாவது தாங்குமா,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நேற்று ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,விற்கு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில், உழைப்பதற்கு தயாராக, நாங்கள் இருக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி, எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம், நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே, இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில், 'புதிய ஆட்சி அமைந்த ஆறு மாதங்களுக்கு, இதைப்பற்றி பேசப் போவதில்லை' என கூறியிருந்தேன். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே, பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதை பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் ஆறு மாதங்கள் அல்ல; ஐந்து மாதங்கள் அல்ல; மூன்று மாதங்களாவது ஆட்சி தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான், இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
