UPDATED : பிப் 18, 2024 12:58 PM
ADDED : பிப் 17, 2024 11:52 PM

லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சியினர் தற்போதே தயாராகி வருகின்றனர். இன்னும் கூட்டணி எதுவும் முடிவு செய்யப்படாவிட்டாலும், பிரதானக் கட்சிகளில், வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு, பிரசாரக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் என்று தேர்தலுக்கான மும்முரம் களைகட்டுகிறது.
புருவம் உயர்த்த வைக்கிறது தி.மு.க.,
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் உதயநிதி, முதல் கட்ட தேர்தல் பிரசாரம் துவங்கும் வகையில், லோக்சபா தொகுதிவாரியாக 16 முதல் 18 வரையிலான தேதிகளில் கூட்டம் நடத்த அறிவுறுத்தினார்.திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைந்துள்ள தாராபுரம், காங்கயம் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டம், ஈரோடு ஆனக்கல்பாளையத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த இரு தொகுதிகளும் ஈரோடு லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அமைச்சர்கள் முத்துசாமி, மகேஷ், சாமிநாதன், கயல்விழி மற்றும் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள் மற்றும் அதன் தி.மு.க., மாவட்ட அமைப்பு சார்பில், நேற்று பெருந்துறையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அவைத் தலைவர் நடராஜன், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரசாரக் கூட்டத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசார மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் 'பிசி'யாக உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தேர்தல் பணிகள் துவங்கியுள்ளதால் கட்சி தொண்டர்கள் குஷியாக உள்ளனர்.
நலத்திட்ட உதவிகள் : கவர்கிறது அ.தி.மு.க.,
திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளிலும், 7,600 நபர்களுக்கு, சேலை, சமையல் பாத்திரம் உள்ளிட்ட நல உதவி வழங்கி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகின்றனர். அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், 24ம் தேதி தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரிசிக்கடை வீதியிலும், 27ம் தேதி, காங்கயத்திலும், முன்னாள் முதல்வர் ஜெ., வின், 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.
வரும், 25ம் தேதி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி தலைமையில், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட, அங்கேரிபாளையத்திலும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள், மணிமேகலை, ஜெயசீலன், கோவை புரட்சித்தம்பி, குன்னத்துார் கோவிந்தராஜ், எழுமலை, கோபி ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளனர்.தற்போது தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் நடக்கின்றன. இதில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன், 'ஆளும் கட்சியான தி.மு.க.,வினரின் மோசமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்ட, மக்களைச் சந்திக்க தெருமுனைக்கு வந்திருக்கிறோம்' என்று விளாசினார்.
207 சக்தி கேந்திரங்கள்: ஈர்க்கிறது பாரதிய ஜனதா
'பூத்' வலுவாக இருக்கும் பட்சத்தில், குடியிருப்பு பகுதியில் ஓட்டு சேகரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள எளிமையாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு பகுதியிலும், மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்களாக உள்ள நபர்களை, உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.ஒரு கேந்திரத்துக்கு, ஐந்து பூத்கள் என பிரித்து, 207 சக்தி கேந்திரங்களை உருவாக்கி உள்ளனர். இவர்களுக்கு, இளம் வாக்காளர், மக்களை சந்தித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தெரிவிக்கும் பிரதான பணியாக வழங்கப்பட்டுள்ளது.
அன்றாடம் காலை, மாலை நேரங்களில் கூட்டங்களை நடத்தி, வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர, லோக்சபா தொகுதி, சட்டசபை தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும், 33 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகள் முன்பு உறுப்பினர்கள் சேர்க்கை பணியை செய்து வருகின்றனர். கல்லுாரி மாணவர்கள் மத்தியில், மாநில தலைவர் அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பலரும் கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.பிரதமர் மோடி வருகை, பாதயாத்திரை நிறைவு போன்றவை முடிந்த பின், முழு வீச்சில் பொறுப்பாளர்கள் தேர்தல் களப்பணியாற்ற உள்ளனர்.