ADDED : டிச 30, 2024 06:18 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் கரும்பிற்கு உரிய விலை கிடைக்காததால், இந்த ஆண்டு, 50 சதவீத விவசாயிகள் நெல் விவசாயத்திற்கு மாறியதால், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்று விவசாயிகள் கூறினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், பெருஞ்சுனை, சிறுசுனை அன்னவாசல், இலுப்பூர், செல்லுகுடி, கரம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 2,000 ஏக்கரில் செங்கரும்பு என்று அழைக்கப்படும் பொங்கல் கரும்பு விவசாயம் செய்வது வழக்கம்.
கடந்த ஆண்டு அதிக அளவில், விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்தனர். ஆனால், உரிய விலை கிடைக்காததாலும், தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு, பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கும், கரும்பு ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, இந்த ஆண்டு மாவட்டத்தில், கரும்பு விவசாயம் 50 சதவீதம் குறைந்து விட்டது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கரில் மட்டுமே பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்திற்கு மாறி விட்டனர்
இந்த ஆண்டு பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் போதிய மழை இல்லை. இருப்பினும் கிணற்றுநீரை நம்பி விவசாயம் செய்தனர். கரும்பு நன்கு வளர்ந்து வரும் நிலையில், பருவமழை திடீரென்று மாவட்டத்தில், அதிக அளவு பெய்ததால் பல இடங்களில் கரும்பு சாய்ந்து சேதமடைந்தது. இதனால், இந்த ஆண்டு பொங்கல் கரும்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
எனவே, வரும் ஆண்டுகளில், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, தமிழக அரசு ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கப்படும். கரும்புகளை தனிநபரிடம் ஒப்பந்தம் செய்து, வியாபாரிகள் மூலமாக, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல், அரசே நேரடியாக கூட்டுறவுத்துறை மூலமாக, விவசாயிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்று கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.