பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்பு இருக்குமா? பா.ஜ., புது வியூகம்!
பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்பு இருக்குமா? பா.ஜ., புது வியூகம்!
ADDED : ஜன 29, 2024 04:26 AM

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளை தேர்தல் வெற்றிக்கான ஆயுதமாக பயன்படுத்தும் வாய்ப்பை பா.ஜ., அரசு நழுவ விடாது என்ற பேச்சு எழுந்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் ஆறாவது மத்திய பட்ஜெட்டை வரும் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபா தேர்தல் வரும் ஏப்., - மே மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுபோன்ற சூழலில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் அல்லது, 'வோட் ஆன் அக்கவுன்ட்' எனப்படும், முந்தைய பட்ஜெட் நீட்டிப்பாக இரு விதங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.
எதுவும் இருக்காது
'வோட் ஆன் அக்கவுன்ட்' எனில், மத்திய அரசின் அடுத்த 4 - 5 மாதங்களுக்கான வரவு - செலவுகளை சமாளிக்க, பார்லி.,யின் ஒப்புதலை பெறும் பட்ஜெட். இதில் புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது.
இடைக்கால பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் இடம் பெறும். ஆனால், அவை நடைமுறைக்கு வராது. தேர்தல் முடிந்த பின் ஆட்சி பொறுப்பேற்கும் அரசு, அந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும்.
பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது. ஆனால், தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இந்த வாய்ப்பை தங்கள் வெற்றிக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை பா.ஜ., அரசு தவறவிடாது என்றும் கூறப்படுகிறது.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சில முன்னுதாரணங்கள் நடந்துள்ளன. கடந்த 2019 - 20ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல், இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை அளிக்கும், 'பி.எம்., கிசான்' திட்டத்தை அறிவித்தார்.
உதவித்தொகை
பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்திற்காக, ஆண்டுக்கு 75,000 கோடி ரூபாய் கூடுதலாக அரசு செலவு செய்கிறது.
'இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறாது' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா ஏற்கனவே அறிவித்த நிலையிலும், மக்களை கவரும் ஒரு சில அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தனிநபர் வருமான வரி விலக்கு தற்போதுள்ள 7 லட்சம் ரூபாயில் இருந்து 7.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
துருப்புச்சீட்டு
பெண்கள், ஏழை மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர் நலன் சம்பந்தமான சில முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது, அக்கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், பா.ஜ.,வை மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் என, அக்கட்சி தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அந்த வரிசையில், கையில் கிடைத்துள்ள பட்ஜெட் எனும் துருப்புச் சீட்டை தேர்தல் வெற்றிக்கான வாய்ப்பாக பா.ஜ., நிச்சயம் பயன்படுத்தும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -