தமிழகத்தில் யாருடன் காங்கிரஸ் கூட்டணி? டில்லியை கை காட்டுகிறார் ஷோடங்கர்
தமிழகத்தில் யாருடன் காங்கிரஸ் கூட்டணி? டில்லியை கை காட்டுகிறார் ஷோடங்கர்
ADDED : ஜன 21, 2026 05:12 AM

காங்கிரசின் கூட்டணி நிலைப்பாடு குறித்த இழுபறி நீடிக்கும் நிலையில், “தி.மு.க., -- காங்., கூட்டணி குறித்து கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும்,” என, டில்லியை கை காட்டி விட்டு, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் நழுவினார்.
சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க, தமிழக காங்., செயற்குழுக் கூட்டம், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. கிரிஷ் ஷோடங்கர், அகில இந்திய காங்., செயலர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டசபை காங்., கட்சி தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்குமாறு, 52 செயற்குழு உறுப்பினர்கள், 39 சிறப்பு அழைப்பாளர்கள் என, 91 பேருக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர் அழகிரி, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
செல்வப்பெருந்தகை கூறுகையில், “காங்., கிராம கமிட்டி மாநாட்டில் பங்கேற்க, தமிழகத்துக்கு ராகுல், கார்கே வருவது குறித்தும், மகளிர் மாநாட்டில் பிரியங்கா பங்கேற்பது குறித்தும் ஆலோசித்தோம். தி.மு.க.,வுடன் தான் தொகுதி பங்கீடு பேசி வருகிறோம். அதில் பிரச்னை இல்லை; குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்,” என்றார்.
கிரிஷ் ஷோடங்கர் கூறியதாவது:
கடந்த ஆண்டு, காங்கிரசின் மறுகட்டமைப்பு ஆண்டாக அமைந்தது. இதுவரை, 14 மாநிலங்களில், 530 மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் புதிய மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். திருப்திகரமாக பணியாற்றவில்லை என்றால், ஆறு மாதங்களில் மாற்றப்படுவர். கன்னியாகுமரியில் மூன்று மாவட்ட தலைவர்கள் பட்டியல், இன்னும் மூன்று நாட்களில் வெளியிடப்படும்.
காங்.,கின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, டில்லி மேலிடம் விரைவில் அறிவிக்கும். கூட்டணி தொடர்பாக, தமிழக காங்., நிர்வாகிகள் 42 பேரிடம், தனித்தனியாக கருத்துக்களை ராகுல் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், டில்லி மேலிடம் கூட்டணி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

