ADDED : ஜன 01, 2024 03:56 AM

வேலைநிறுத்தப் போராட்டத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம் என்பதால், அரசு பஸ்கள் இயக்கத்தில், அதிகாரிகள் உஷார் செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 15வது ஊதிய பேச்சை துவங்க வேண்டும்; ஓய்வு தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி முதல் வாரம் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதனால், 8 கோட்ட மேலாண் இயக்குனர்கள், அவர்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளை உஷார்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, கோவை கோட்ட மேலாண் இயக்குனர், கிளை மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
போக்குவரத்து கழக சில தொழிற்சங்கங்கள், ஜனவரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அனைத்து பஸ்களின் சேவையும் வழக்கமான அட்டவணைப்படி இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
டிரைவர், கண்டக்டர்களை பாதுகாப்பற்ற இடங்களில் பஸ்களை நிறுத்த கூடாது என அறிவுறுத்துவதோடு இருவரில் ஒருவர், கட்டாயம் பஸ்சில் இருக்க செய்ய வேண்டும்.
குற்றங்களை தடுக்க பணியாளர்களை நியமிப்பது, பஸ்களை இயக்க, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பணியாளர்கள் பணிக்கு வருவதை தடுக்கும்படி யாரேனும் நடந்து கொண்டால், உடனே போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து உயரதி காரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் இயக்கம் குறித்து, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அரசுக்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு ஒவ்வொரு கிளையில் இருந்து தகவல் தர வேண்டும். எந்த அசம்பாவிதம் நடந்தாலும் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைவரும் பணிக்கு வரவும், பணிமனைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையை சேலம், மதுரை, நெல்லை, கும்பகோணம், விழுப்புரம், எஸ்.இ.டி.சி., சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரிகள், கிளை மேலளார்களுக்கு வாய்மொழி உத்தரவாக பிறப்பித்துள்ளனர்.
- நமது நிருபர் -