ஜனநாயக திருவிழா: எப்படி தயாராகிறது தேர்தல் கமிஷன் ?
ஜனநாயக திருவிழா: எப்படி தயாராகிறது தேர்தல் கமிஷன் ?
UPDATED : மார் 18, 2024 10:54 AM
ADDED : மார் 17, 2024 11:39 PM

புதுடில்லி: நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19ல் துவங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க, 10.5 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, 55 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, நான்கு லட்சம் வாகனங்கள் தயாராக உள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நம் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் கமிஷன் துவங்கிவிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம், முதல்கட்ட சோதனை பணிகளை துவங்கியது. தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்ற சோதனை மாநிலம் வாரியாக நடத்தப்பட்டன.
இதற்காக அட்டவணை தயாரிக்கப்பட்டு மாநிலம் வாரியாக மாதிரி ஓட்டுப்பதிவும் நடந்தன. இதில், மாநில தலைமை தேர்தல் கமிஷனர் உடன் தேர்தல் பணியாளர்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் . இயந்திரங்களை தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்திய மின்னணு கழக பொறியாளர்களும் உடன் இருந்தனர். பழுதான இயந்திரங்கள் உடனடியாக அந்நிறுவனத்திடம் வழங்கப்படும். அது சரி செய்யப்பட்டோ அல்லது அதற்கு பதில் வேறு இயந்திரங்களோ மாற்றித் தரப்படும்.
இதன்பின், மாநில தலைமை தேர்தல் கமிஷனர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுட னான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அப்போது, ஒவ்வொரு அதிகாரியின் அனுபவங்களின் அடிப்படையில் தேர்தலை முறைகேடுகளின்றி எப்படி நடத்துவது என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன. பாதுகாப்பு படையினரை பணியமர்த்துவதும், அவர்களை ரயில், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்வதுமே, தேர்தல் நிர்வாக பணிகளில் உள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
இதற்காக, மத்திய உள்துறை மற்றும் ரயில்வே மூத்த அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பல சுற்று பேச்சு நடத்துகின்றனர். தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினருக்கான தங்கும் வசதி, தரமான உணவு வழங்கும் பணியில் மிகப் பெரிய அளவில் திட்டமிடல் தேவைப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கும். அப்போது, ஓட்டுப்பதிவின் போது விரல்களில் வைக்கப்படும் மை, தயாரிக்கப்பட்டு தேர்தல் கமிஷனிடம் வழங்கப்படும்.
கர்நாடகா அரசுக்கு சொந்தமான, 'மைசூர் பெயின்ட்ஸ் அண்டு வார்னிஷ்' என்ற நிறுவனம், 1962 முதல் இந்த மையை தயாரித்து வழங்கி வருகிறது. இதன் 10 மில்லி லிட்டர் குப்பியில், 700 பேரின் விரல்களில் மை வைக்க முடியும். ஒரு ஓட்டுச்சாவடியில் 1,500 வாக்காளர்கள் வரை இருப்பதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு இரண்டு குப்பிகள் வரை வழங்கப்படுகின்றன.
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் எடுத்து வரப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 45 நாட்கள் வரை, மின்னணு மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். காரணம், தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர, 45 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

