ADDED : மே 12, 2026 05:51 AM

மேற்காசிய பகுதியில் நிலவும் சூழலால், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்கவும், பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்கவும், வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்க்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தவிர்க்க முடியாது
விலை ஏற்றத்தால் சேமிப்பு, முதலீடு என்றெல்லாம் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. நடுத்தர மக்கள், திருமணம், காதுகுத்து ஆகிய விசேஷங்களுக்கு மட்டுமே தங்கம் வாங்குவர். சுபநிகழ்வுகளில் தங்கம் தான் மரியாதை, கவுரவத்தை நிர்ணயிக்கிறது. பத்து பவுன் வாங்க வேண்டிய இடத்தில் 4 பவுனாவது வாங்கித்தான் ஆக வேண்டும். விலை ஏறிவிடும் என்ற அச்சத்தால், இரண்டு, மூன்று ஆண்டுகளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் வைப்பவர்கள், இப்போதே தங்கநாயணங்களையும் வாங்கி சேமிக்கிறார்கள்.
- உமா, காமராஜ் நகர்.
வாங்கும் நிலை இல்லை
எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கம் எப்போதோ எங்களுக்கு எட்டா கனியாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பது தான் எங்களின் இலக்கு. அதற்காக இருக்கும் தங்கத்தையும் விற்று வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாகவே தங்கம் வாங்குவதை நிறுத்தி விட்டோம். பிரதமர் சொல்லாவிடினும் நாங்கள் தங்கம் வாங்கும் நிலையில் இல்லை. தற்போதைய நிலையில் ஓராண்டு முடிந்தாலும் நாங்கள் வாங்குமளவுக்கு தங்கத்தின் விலை குறையுமா என்பது தெரியவில்லை.
-அமுதா, பூ மார்க்கெட்
காரணம் சரியானது
உலகளவில் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. பல நாடுகளும் நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன. அதனால் தான் விலையில் பெரிய ஏற்றம் இருந்து கொண்டிருக்கிறது. பிரதமரே தங்கம் வாங்க வேண்டாம் என்றுசொல்லும்போது காரணமில்லாமல் இருக்காது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்கம் வாங்க வேண்டாம் என்று அவர் சொல்லியிருப்பதை வரவேற்கிறேன். நாங்களே தங்கம் வாங்கும் திட்டத்தில் இருந்தோம். பிரதமர் சொன்னதால் தள்ளி வைத்துள்ளோம். நிலைமையை பொறுத்திருந்து பார்த்து முடிவு செய்வோம்.
-பாலமுருகன், ஆர்.எஸ்.புரம்
ஆசையை அடக்க முடியுமா
தங்கம் விக்கிற விலையில வாங்குற நிலைமையில இன்னைக்கு அடித்தட்டு மக்கள் இல்லைங்கிறதுதான் நிஜம். ஆனா, ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கி சேர்க்கணும்ங்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? தங்கத்தோட விலை விர்ருன்னு ஏறிக்கிட்டே போனாலும், எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு கிராமாவது வாங்கிடணும்னு நினைக்கிற சாதாரண மனுஷனோட ஆசையை தப்புன்னு சொல்ல முடியுமா? பிரதமர் பேச்சுல நியாயம் இருந்தாலும் ஆசைய அடக்க நம்ம மக்களால முடியாதுங்க.
-கமலா, காளப்பன்நாயக்கன் பிரிவு.
நிறுத்தினா விலை குறையும்
நாம தங்கம் வாங்குறதை கொஞ்ச காலத்துக்கு நிறுத்தினாலே, தானா விலை குறைய வாய்ப்பிருக்கு. எந்த பொருளா இருந்தாலும், விலை குறைஞ்சா அது எல்லாருக்குமே சவுகரியம் தான். ஆனா, விலை கட்டுக்கடங்காம ஏறும்போதும் கவலையே இல்லாம போட்டி போட்டு தங்கம் வாங்கிகிட்டே இருந்தா, அப்புறம் எப்படி விலை குறையும்? இதனால கஷ்டப்படப்போறது சாதாரண நடுத்தர, அடித்தட்டு மக்கள்தான். அதனால பிரதமர் சொல்றதுல ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. மக்கள் ஏத்துக்கணும்.
— முருகேசன், சவுரிபாளையம்
நாட்டுக்காக செய்யலாம்
தங்கம் விற்கும் விலைக்கு நினைத்தாலும் தற்போது நடுத்தர மக்களால் வாங்க முடியாது. திருமணம், சடங்கு போன்ற நிகழ்வுகளுக்கு எடுப்பதை தவிர்க்க முடியாது. வெளிநாடு சுற்றுலா செல்வதை தாராளமாக அனைத்து தரப்பினரும் தவிர்க்க முடியும். தவிர, பெட்ரோல் பயன்பாட்டை எங்கெல்லாம் முடியுமோ அங்கு குறைத்துக்கொள்ளலாம். ஒட்டு மொத்தமாக நாட்டின் நல்லதுக்காக பிரதமரே நம்மகிட்ட கேட்கும் போது எதுவெல்லாம் முடியுமோ அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.
-அனிதா, சீரநாயக்கன்பாளையம்
சாத்தியமே இல்லீங்க
தங்கத்தை ஓராண்டுக்கு மக்கள் வாங்க வேண்டாம் என்று பிரதமர் கூறியிருப்பது ஏற்றுகொள்ளதக்கது அல்ல. இது சாத்தியமற்றது. இதனால் எந்த வீட்டிலும் சுபகாரியம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். தமிழகத்தில் பெண்கள் சிறுக, சிறுக சேமித்த பணத்தை அவர்களது குடும்ப நல்ல காரியம் வரும் போது தங்க நகைகளாக வாங்குவார்கள். அவர்கள் தங்கத்தை வாங்க கூடாது என்று சொன்னால் சுப நிகழ்ச்சிகள் தடைபடும். இந்தியா முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
--வக்கீல் அகஸ்டஸ், கவுண்டம்பாளையம்
வாங்குவதை குறைக்க முடியுமா?
இப்போது இருக்கிற போர் சூழலில், அந்நிய செலவாணி கையிருப்பு , தங்கம் வாங்கும் போது குறையும் என்று மோடி சொன்னது சரி தான். அதே நேரத்தில் பெண்களுக்கு அவசர காலத்திற்கு ஒரு முதலீடாகவும், கடன் சுமையை தீர்க்கவும் தங்கம் பயன்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆடம்பரத்திற்காகவும், சேர்த்து வைக்கவும், தங்கம் வாங்குவதில்லை. அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு வாங்குகின்றனர். அதனால் மோடி சொன்னது போல தங்கம் வாங்குவதை குறைக்க முடியுமா என்பது காலப்போக்கில் தான் தெரியும்.
-வக்கீல் சஞ்சயன், சிங்காநல்லுார்
எட்டா உயரத்தில் தங்கம்
தங்க நகை போட்டு கொள்வது தான், ஏழைகளின் அதிகபட்ச கனவாக இருக்கும். சிறுக சிறுக சேமித்து தங்க நகை வாங்கிய காலம் மலையேறிவிட்டது. தற்போது அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படும் சூழலில், தங்க நகை வாங்குங்கள் என்று கூறினால் கூட, கையில் காசில்லை. தங்கம் விலை உச்சத்திற்கு சென்ற போதே, அதை இறக்குமதி செய்வதால், இந்தியா சந்திக்கும் பொருளாதார சிரமங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கலாம்.
- கே.காஞ்சனா, சங்கனுார்.
சூழலை புரிஞ்சுக்கணும்
சர்வதேச போர் சூழல்; தங்கத்துக்கு ஏற்பட்டுள்ள விலை உயர்வு; தொடர்ந்து மக்கள் வாங்குவதால் ஏற்படும் 'டிமாண்ட்' இதையெல்லாம் மனசுல வச்சு யோசிச்சுதான் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் சொல்ற மாதிரி செஞ்சா கட்டாயம் நமக்கு நன்மை உண்டாகும். நமக்கும் நம் நாட்டிற்கும் நெருக்கடி வருவதை தடுப்பதற்காகவே பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
--மாலாசுந்தர், கவுண்டம்பாளையம்
நல்லதே நடக்கும்
கொரோனோ காலத்தில் பிரதமர் மோடி டிவி வாயிலாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நாமும் அதை பின்பற்றினோம் அதனால் பலரும் கடும் விளைவுகளிலிருந்து தப்பினோம். அவரது வேண்டுகோளை கட்டாயம் பின்பற்றுவதோடு, நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பின்பற்ற வலியுறுத்தி வருகிறோம். இதை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. நகை கடைக்காரர்கள் மட்டும் நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்களா? அவர்களும் இதற்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள்.
--லட்சுமி, துடியலுார்
தவிர்க்க முடியாதுங்க
நடுத்தர மக்களின் நம்பிக்கையான முதலீடாக தங்கம் மட்டுமே இருக்கிறது. ஆண்டுக்கு 5-10 கிராம் வாங்குவதால் சிக்கல் இல்லை. அரசாங்கமே தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய விளம்பரம் வெளியிட்டது. பெரும் பணக்காரர்கள் கிலோ கணக்கில் தங்கம் வாங்குவதற்கு தடை விதிக்கலாம். குறிப்பிட்ட கிராமிற்கு மேல் தங்கம் வாங்காமல் இருக்க அறிவுறுத்தலாம். ஆனால், எப்போது வாங்க வேண்டாமென கூறுகிறார்களோ அப்போது தான், மக்கள் அச்சத்தில் கையில் இருக்கும் சேமிப்பை தங்கமாக மாற்றுவார்கள்.
- ராஜமாணிக்கம், காந்திபார்க்
