ADDED : டிச 15, 2024 12:21 AM

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பு விவாதத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி சாவர்க்கர் என்ன கூறியிருந்தார் தெரியுமா. 'அரசியலமைப்பு சட்டத்தில், இந்தியர்கள் குறித்து எதுவும் கிடையாது. நம் தேசத்தில், வேதங்களுக்கு பின், மிகவும் மதிப்பு வாய்ந்தது எதுவெனில், மனுஸ்மிருதி மட்டுமே.
'நம் கலாசாரம், பழக்க வழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிக்கிறது. மனுஸ்மிருதியானது, பல நுாற்றாண்டுகளாக நம் தேசத்தின் ஆன்மிக மற்றும் தெய்வீகப் பயணத்தின் குறியீடாக இருக்கிறது' என்று தான் கூறியிருக்கிறார்.
எழுத்துப்பூர்வமாகவே, 'அரசியலமைப்பு சட்டத்தில் எதுவுமே இல்லை. இந்த அரசியலமைப்பு சட்டப் புத்தகத்திற்கு பதிலாக மனுஸ்மிருதி புத்தகம் தான் இருக்க வேண்டும்' என்றும் சாவர்க்கர் கூறினார். தற்போது நடக்கும் போராட்டமே, இந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடையில் தான்.
இப்போது என் கேள்வி என்னவென்றால், சாவர்க்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள நீங்களும், 'அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்று பேசுகிறீர்கள். அப்படி என்றால், நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா; கிண்டல் செய்கிறீர்களா? அவரது எழுத்தை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்களா என்பதை தெரிவிக்க வேண்டும்.
குருதட்சணையாக கட்டை விரலை ஏகலைவனிடம் துரோணாச்சாரியார் கேட்ட கதை அறிவோம்.
அதுபோல, இந்த ஒட்டுமொத்த நாட்டின் கட்டை விரலை வெட்டுவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது இந்த அரசு. மும்பையில் உள்ள தாராவியை அதானியிடம் கொடுத்ததன் வாயிலாக, தொழில் முனைவோர் சிறு தொழில் செய்வோரின் கட்டை விரலை வெட்டி விட்டீர்கள்.
ஏகலைவனைப் போல, தேர்வுகளுக்கு இந்த நாட்டின் மாணவர்கள் மிகுந்த பயிற்சி எடுத்து தயாராகின்றனர். முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்து பின் ஓடுவர். அக்னிவீர் திட்டம் அறிவிக்கப்பட்டதும், அவர்களது கட்டை விரலும் வெட்டப்பட்டது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பொதுச் சமூகத்தில் தீவிர கோரிக்கை இருந்தபோதிலும், அதை நடத்துவதற்கு மத்திய அரசு தயங்குவது ஏன் என தெரியவில்லை.
புதிய திறன் படைக்கும் இந்தியாவை உருவாக்கும் வகையில், நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை எங்கள் கூட்டணி நடத்தி, இட ஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதத்தை உடைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -