தனிநபர் வருவாய் அதிகம் என கூறுகிறீர்கள்; வறுமைக்கோட்டுக்கு கீழ் 75% பேர் உள்ளனரா?
தனிநபர் வருவாய் அதிகம் என கூறுகிறீர்கள்; வறுமைக்கோட்டுக்கு கீழ் 75% பேர் உள்ளனரா?
UPDATED : மார் 20, 2025 07:31 AM
ADDED : மார் 20, 2025 04:03 AM

புதுடில்லி: 'மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கேட்டால், தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் மானியம் பெறுவதற்காக, வறுமை கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக கணக்கு காட்டுகின்றனர். ரேஷன் கார்டுகள் வினியோகத்தில் மாநில அரசுகள் தாராளமாக நடந்து கொள்வது ஏன்?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.
விசாரணை
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்படி, 2021ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தில் பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் கூறியதாவது:
பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒரு சிலரிடம் அதிகளவில் சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் ஏழைகள், ஏழைகளாகவே உள்ளனர். மாநிலத்தின் மொத்த வருவாயின் சராசரியே, தனிநபர் வருவாயாக காட்டப்படுகிறது.
அதனால்தான், அது அதிகமாக உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 8 கோடியாக உள்ளது.
கடந்த, 2021ம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. அதனால், இந்த சலுகைகளை பெற வேண்டிய 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு அவை கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:
இத்தனை கோடி பேருக்கு ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்கள் கூறுகின்றன. வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்களை அளிக்கும்போது, மாநிலத்தின் சராசரி தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாக மாநிலங்கள் கூறுகின்றன.
கவலை
அதே நேரத்தில், மானியம் பெறுவதற்கான புள்ளி விபரங்கள் அளிக்கும்போது, 75 சதவீத மக்கள், பி.பி.எல்., எனப்படும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறுகின்றன.
இந்த இரண்டையும் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்? இவை முரணாக உள்ளன. உண்மையான பயனாளிகளுக்குத்தான் அரசின் மானியங்கள் கிடைக்கின்றனவா அல்லது நடுவில் யாருடைய பாக்கெட்டுக்காவது போய் விடுகிறதா என்பதே எங்களுடைய கவலை.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பத்தி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 81.35 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக கூறியுள்ளார்.
நடைமுறை
இதைத் தவிர வேறு சில திட்டங்களில், 11 கோடி பேருக்கு ரேஷன் இலவசமாக வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
மத்திய அரசு செயல்படுத்தும் இந்த திட்டங்களை, அந்தந்த மாநிலங்கள் நடைமுறைபடுத்தி வருகின்றன. மத்திய அரசின் மானியம் பெறுவதற்காக, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை தாராளமாக வினியோகித்து வருகின்றனவா?
நாங்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுடைய வலி, வேதனையை அறிந்துள்ளோம். அதே நேரத்தில், உண்மையான பயனாளிகளுக்கே, அரசின் நல உதவித் திட்டங்கள் சென்று சேருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.