இளைஞர் காங்., உறுப்பினர் சேர்க்கை 'பேய்' போன்றது: கார்த்திக் சிதம்பரம்
இளைஞர் காங்., உறுப்பினர் சேர்க்கை 'பேய்' போன்றது: கார்த்திக் சிதம்பரம்
ADDED : டிச 03, 2024 03:25 AM

'இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பேய்; அதை நிறுத்த வேண்டும்; நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்கிறோம்' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு எதிர் கோஷ்டிகளின் தரப்பில் கண்டன கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நேற்று முன்தினம் துவங்கியது.
அதிருப்தி
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் முருகன் முனிரத்தினம், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்து கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், 'இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பேய் போன்றது; அதை நிறுத்த வேண்டும்; நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.
அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வமாக ஈடுபட வரும் நிர்வாகிகளிடம் மனச்சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
அவர் மீது டில்லி மேலிடம் விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்கோஷ்டி தரப்பில் புகார் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ராமசாமி கூறியதாவது:
கார்த்தி சிதம்பரத்திற்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. கட்சியின் மேலிடத்தில் தான், தன் கருத்தை தெரியப்படுத்திருக்க வேண்டும். கருத்தை வெளிப்படையாக தெரியப்படுத்தக்கூடாது.
விளக்கம்
இளைஞர்கள் ஆர்வமாக கட்சியில் சேர விரும்பும் நிலையில் அவர்களை தடுமாற வைக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக்கூடாது. அவர் எம்.பி., என்பதால கட்சி மேலிடம் தான் விளக்கம் கேட்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், 7 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த முறை உறுப்பினர் சேர்க்கையின் இலக்கு 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் தோல்வி அடைந்தார். இந்த முறை இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், தன் ஆதரவாளர்கள் அதிகமாக இடம் பெற வேண்டும் என, கார்த்தி சிதம்பரம் கருதுகிறார்.
கார்த்தி சிதம்பரத்தின் அணிக்கு எதிராக, அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர் ஆதரவாளர்கள் மத்தியிலும் பலத்த போட்டி உருவாகும்.
எனவே தான், உறுப்பினர் சேர்க்கையில் போலி உறுப்பினர்களை சேர்த்து, கட்சியை ஏமாற்றாமல், உண்மையான உறுப்பினர்களை சேர்த்து பேய் மாதிரி உழையுங்கள் என்ற அர்த்தத்திலும் கார்த்தி சிதம்பரம் கருத்து சொல்லியிருக்கலாம்.
முரண்பாடு
அதேசமயம், போலி உறுப்பினர்களை சேர்ப்பதில் பேய் மாதிரி இளைஞர் காங்கிரசாரின் செயல்பாடு உள்ளது என்றும், உறுப்பினர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என்ற அர்த்தத்திலும் கருத்து தெரிவித்திருக்கலாம்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும் மிஷின் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சொல்லியுள்ள நிலையில், மிஷினில் எந்த பிரச்னையும் இல்லை என, கார்த்தி முரண்பட்ட கருத்து தெரிவிக்கிறார். அவர் கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -