பருவமழையை எதிர்கொள்ள எம்.எல்.ஏ.,க்கள் ‘வாட்ஸ் ஆப்’ குழு எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் வலியுறுத்தல்
பருவமழையை எதிர்கொள்ள எம்.எல்.ஏ.,க்கள் ‘வாட்ஸ் ஆப்’ குழு எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2026 08:13 PM
புதுச்சேரி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழு அமைக்க தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான கூட்டத்தை தலைமைச் செயலாளர் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. சிறிய மழை பெய்தால் கூட மாநிலம் முழுதும் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்கிறோம். இதை சரி செய்ய கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,க்களை அவசியம் அழைத்திருக்க வேண்டும்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் போதிய நிதி இல்லாததால், பல்வேறு பணிகள் தடைப்படுகின்றன. இந்த ஆண்டு கூட பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் நகராட்சிக்கு ரூ.5 லட்சமும், கொம்யூன் பஞ்சாயத்திற்கு ரூ. 3 லட்சமும் ஒதுக்குவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு பேரிடர் மேலாண்மை துறைக்கு அதிக நிதி ஒதுக்கி கொடுத்து, அதன் மூலம் பணிகளை செய்ய வேண்டும்.
எனவே, தொகுதி எம்.எல்.ஏ., க்கள் மழை நேரத்தில், எப்படி செயல் பட வேண்டும் என்பதற்கு, தலைமைச் செயலர், அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும். அதன் மூலமாக எம்.எல்.ஏ., க்கள் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்வர். மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் எந்த அதிகாரி நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்தால், எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக அந்த அதிகாரியைத் தொடர்பு கொள்வர். அப்படி ஒரு இணைப்பை தலைமை செயலர் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
