/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதாள சாக்கடை திட்ட நிதி ஒதுக்கீடு விவகாரம்: பொதுப்பணித்துறை செயலர் விளக்கம்
/
பாதாள சாக்கடை திட்ட நிதி ஒதுக்கீடு விவகாரம்: பொதுப்பணித்துறை செயலர் விளக்கம்
பாதாள சாக்கடை திட்ட நிதி ஒதுக்கீடு விவகாரம்: பொதுப்பணித்துறை செயலர் விளக்கம்
பாதாள சாக்கடை திட்ட நிதி ஒதுக்கீடு விவகாரம்: பொதுப்பணித்துறை செயலர் விளக்கம்
ADDED : ஜூலை 14, 2011 12:24 AM
புதுச்சேரி : பாதாள சாக்கடைத் திட்டத்தில் கவர்னர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்கு மேல் நிதி வழங்கியதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என பொதுப்பணித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி நகரப் பகுதிக்கான ஒருங்கிணைந்த பாதாள கழிவுநீர் திட்டத்திற்கு ரூ 282.17 கோடிக்கு, கவர்னர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள நிதி வழங்கும் அதிகார வரம்பிற்கு மேல் ஒப்புதல் வழங்கியதாக ஒரு சில அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சமீபத்தில் அவதூறு எழுப்பியதாக தெரிகிறது.
இவை தவறானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும்.இதுகுறித்த உண்மை நிலவரம் வருமாறு:இவை ஜெ.என்.என். யூ.ஆர்.எம்., திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒப்புதல் மற்றும் மேற்பார்வைக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டம் 2007ம் ஆண்டு ரூ. 203.40 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பின் அதிகார ஒப்புதல் பெற்றபின் பொதுப்பணித்துறை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகோரியது. இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச ஒப்பந்தப்புள்ளி ரூ. 282.17 கோடிக்குப் பெறப்பட்டு, மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஒப்பந்த மதிப்பீட்டுத் தொகைக்கும், திட்ட மதிப்பீட்டுத் தொகைக்கும் இடைப்பட்ட அதிகப்படியான ரூ.78.77 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கியது. இவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
மேலும் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நிதித்துறையால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ்வரும், அங்கமான திட்டங்களுக்கு, நிதி வரம்பு அதிகார விதி எண் -18ன் படி ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு முழு அதிகாரம் அளித்துள்ளது.தேவையான நிதி வரம்பு அதிகார விதிகளின்படி, கவர்னரின் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே இதுகுறித்து எழுந்துள்ள அவதூறு கருத்துக்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை. மேலும் இந்த ஒப்பந்தத்தை தடை செய்யப்பட்ட குழுமத்திற்கு வழங்கியதாகக் கூறப்படுவதும் உண்மைக்கு மாறானது. பொதுப்பணித்துறையின் உயர்மட்டக்குழுவால் குறைந்தபட்ச ஒப்பந்தப்புள்ளி அளித்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஆய்வு செய்யப்பட்ட பின்பே வழங்கப்பட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

