/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் திருட்டு
ADDED : ஆக 07, 2024 11:19 PM

பாகூர் : பாகூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பம் பெரிய பாளையத்தம்மன் கோவில் பூசாரி ஜானகிராமன், நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை பூஜை செய்ய கோவிலுக்கு சென்றார்.
கோவிலின் முன்பக்க இரும்பு கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த காணிக்கை உண்டியலை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மூலஸ்தான கதவும் உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகை, வெள்ளி நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த பூஜை பொருட்கள் மாயமாகி இருந்தது.
தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கோவில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து நகைகளை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.