ADDED : மே 07, 2024 03:50 AM
வானுார் : கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, கிளியனுார் சந்திப்பு அருகே பைக்கில் மூட்டையுடன் வந்த இருவரை நிறுத்தினர். அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
பைக்கில் இருந்த மூட்டைகளை சோதனை செய்ததில், பிளாஸ்டிக் பாட்டில்களில், 87.5 லிட்டர் சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கிளயனுாரில் விற்க கடத்தி செல்வது தெரிய வந்தது.
தொடர்ந்து பிடிபட்ட நபரை விசாரணை செய்ததில், அவர் புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பரசுராமன் மகன் சூர்யா,24; என்பதும், தப்பியோடியவர் வழுதாவூர் ரமேஷ் மகன் கணபதி,23; என்பதும்; இந்த கடத்தலுக்கு வழுதாவூர் ரமேஷ் மகன் ரஞ்சித்,25; சந்தை புதுக்குப்பம் முருகன் மகன் மணிமாறன்,24; சாராய வியாபாரி பாவாடை மகன் சீத்தா (எ) பரமசித்தானந்தன், 40; ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சர்யா, மணிமாறன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கடத்தி வந்த 87.5 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் தொடர்புடைய கணபதி, ரஞ்சித், சீத்தா ஆகியோரை தேடிவருகின்றனர்.