சுற்றுலா பயணியிடம் பைக், போன் பறித்த 2 ரவுடிகள் கைது
சுற்றுலா பயணியிடம் பைக், போன் பறித்த 2 ரவுடிகள் கைது
ADDED : மே 13, 2026 08:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி – கடலுார் சாலையில் சுற்றுலா பயணியிடம் பைக் மற்றும் மொபைல் போனை பறித்து சென்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிரப்பாக்கம், பள்ளிப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாம் பாஷா, 30; கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி தனது நண்பர்களான குலாம், சுகுமார் ஆகியோருடன் பைக்கில் (டி.என்.19 சி.எக்ஸ் 0749) புதுச்சேரி வந்தார்.
பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கிய மூன்று பேரும், ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அன்று இரவு 11:00 மணியளவில் சுகுமார், பைக்கை எடுத்துக் கொண்டு டிபன் வாங்கி வருவதாக கூறி வெளியில் சென்றார். ஆனால், சுகுமார் மறுநாள் காலையில் தான் மீண்டும் அறைக்கு வந்துள்ளார்.
அவரிடம் ஏன் இரவு முழுதும் அறைக்கு வரவில்லை என, மற்ற இருவரும் கேட்டபோது, சுகுமார் தான் கடற்கரைக்கு சென்றதாகவும், திரும்பி வர வழி தெரியாமல் சுற்றி திரிந்ததாகவும், அதிகாலை 2:00 மணிக்கு கடலுார் சாலை மால் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 3 பேர் தன்னை வழிமறித்து மிரட்டி, மொபைல் மற்றும் பைக்கை பறித்து சென்றுவிட்டதாக தெரிவித்தார். அதனால், இரவு அறைக்கு வர முடியவில்லை என, கூறினார்.
இதுகுறித்து நிஜாம் பாஷா உருளையன்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடினர்.
இதற்கிடையே, புதுச்சேரி – கடலுார் சாலையில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும் படியாக பைக்கில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஓட்டி வந்த பைக், சுகுமாரிடம் இருந்து பறிக்கப்பட்டது என, தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார்,23; சந்தோஷ், 24; என்பதும், ரவுடிகளான இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
