ADDED : ஜூலை 17, 2026 11:24 PM
புதுச்சேரி: உருளையன்பேட்டையில் ரவுடியை தாக்கி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உருளையன்பேட்டை, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் அருண் மரியநாதன், 36; ரவுடியான இவர் மற்றும் இவரது நண்பர் ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ரகு ஆகியோர் மீது ஆந்திராவில் நடந்த ராக்கி ரமேஷ் கொலை வழக்கும், புதுச்சேரியில் பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ளன.
இதற்கிடையே, இவரது நண்பரான ரகுவிற்கும், கோவிந்தசாலையை சேர்ந்த சோனி, கென்னடி நகரை சேர்ந்த நாகராஜ் இடையே ரவுடிகளில் யார் பெரியவர் என்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.
அருண் மரியநாதன், ரகுவின் நண்பர் என்பதால், கடந்த 14ம் தேதி சோனி, நாகராஜ், தட்டாஞ்சாவடியை சேர்ந்த இலால் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த மண்வெட்டி, சுத்தி மற்றும் மரக்கட்டை ஆகியவற்றால் அருண் மரியநாதனை தாக்கிவிட்டு, தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த அருண் மரியநாதனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அருண் மரியநாதன் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கில் தலைமறைவாக இருந்த அருண் சோனி, 32; நாகராஜ், 33; இலால், 33; ஆகியோரை நேற்று புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்தபோது, போலீசார் கைது சென்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
