சங்ககால மக்கள் பயன்படுத்திய 3 உறை கிணறுகள் கண்டெடுப்பு
சங்ககால மக்கள் பயன்படுத்திய 3 உறை கிணறுகள் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 23, 2026 06:31 PM

பண்ருட்டி: செங்கல் சூளை பள்ளத்தில் 3 உறை கிணறுகள், சுடுமண் காதணி, குறியீடு பானை ஒடுகள் கண்டெடுக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம், பூண்டி, வரிஞ்சிப்பாக்கம் செங்கல் சூளை போடுவதற்காக எடுத்த பள்ளத்தில் மூன்று உறைகிணறுகள், பானை ஓடுகள் இருப்பதாக வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்த சிவசக்தி, பாலமுருகன் , விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர் தமிழ்செல்வன் ஆகியோர் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் தண்டாயுதபாணி அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் சங்க காலத்தை சேர்ந்த சுடுமண் காதணி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள்,கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை, செங்கற்கள் மற்றும் மூன்று உறைகிணறுகள் ஆகியவற்றை கண்டறிந்தனர் .
இதுகுறித்து ஆய்வாளர்கள் தண்டாயுதபாணி மற்றும் இம்மானுவேல் கூறியதாவது :
பூண்டி மற்றும் வரிஞ்சிப்பாக்கம் பகுதியின் மலட்டாறு பக்கத்தில் செங்கல் சூளைக்காக எடுத்த பள்ளத்தில் ஆய்வு செய்தோம். ஆய்வின் போது 3 உறைகிணறுகள், 100 மீ., இடைவெளியில் ஆங்காங்கே இருந்தது. அதில் ஒன்று முழுமையாக எட்டு அடுக்குகளை கொண்டதாக இருந்தது.
மற்ற இரண்டும் சிதைந்த நிலையில் இருந்தது. மேலும் சங்ககாலத்தை சேர்ந்த சுடுமண் காதணி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் , கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை, செங்கற்கள் கண்டறிந்தோம். இவைகள் சங்ககால மக்கள் குடிநீருக்காக பயன்படுத்திய உறைகிணறு.
பொதுவாக, உறை கிணறுகள் இரு வகைகள் . அதில் ஒன்று அடுக்கு வகை , மற்றொன்று சொருகு வகை உறை கிணறு.
குடிநீர் தேவைக்காகவும், வீட்டின் பயன்பாட்டுக்காகவும் உறை கிணறுகள் தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மை காலம் வரை இருந்து வருகிறது.
உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி, பூம்புகார், பட்டறை பெரும்புதுார், அரிக்கமேடு, மாமல்லபுரம் போன்ற இடங்களிலும், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் திருக்கோவிலூர், பேரங்கியூர், செஞ்சி, திருவாமாத்துார், கண்டரக்கோட்டை, உளுந்தாம்பட்டு, தளவானுார், அக்கடவல்லி போன்ற பல இடங்களிலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
