ADDED : மே 29, 2026 06:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ. 1.56 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, புஸ்சி வீதியை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 86 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர், பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து, ஆன்லைனில் கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், கேரளாவில் இருந்து லாட்டரி ஏஜென்ட் பேசுவதாக கூறி, தங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லாட்டரி பரிசு பணத்தை பெற ஜி.எஸ்.டி., மற்றும் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறியுள்ளார். இதைநம்பிய அவர், மர்மநபருக்கு ரூ. 30 ஆயிரத்து 849 அனுப்பி ஏமாந்துள்ளார்.
இதேபோல், வில்லியனுாரை சேர்ந்தவர் 40 ஆயிரம் என 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரத்து 849 இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
