/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ. 200 கோடி மோசடி
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ. 200 கோடி மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ. 200 கோடி மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ. 200 கோடி மோசடி
ADDED : ஆக 03, 2024 11:35 PM

புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, நாடு முழுதும் 3,400 பேரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் நான்கு பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். பேஸ்புக் பக்கத்தில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தனியார் ஏஜென்சி அதிகாரி என, தன்னை அறிமுகப்படுத்தி பேசிய நபர், கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். விசா, மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் எடுப்பதற்கு பணம் டிபாசிட் செய்ய வேண்டும் என, கூறியுள்ளார்.
இதனை நம்பிய சுரேஷ்குமார், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் 17.71 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார் கடந்த மார்ச் 22ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்தனர்.
கடந்த இரு மாதங்களாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுரேஷ்குமாரை ஏமாற்றியது உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல் என்பதும், பெங்களூருவில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி, ஏட்டு மணிமொழி, காவலர்கள் வினோத், பாலாஜி, ரோஸ்லின்மேரி, கமலி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பெங்களூருவில் மோசடி கும்பல் இருக்கும் இடத்தை கண்டறிந்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள், மத்திய பிரதேச மாநிலம், கோபால் பூராவை சேர்ந்த சுபம் ஷர்மா, 29; பீகார் நவடா, தீபக்குமார், 28; உத்தரபிரதேசம் பஸ்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்கவுண்ட், 23; மத்திய பிரதேசம் கணேஷ்பூரா பகுதியைச் சேர்ந்த நீராஜ்குர்ஜார், 28; என தெரிய வந்தது.
விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நாடு முழுதும் 3,400 பேரிடம் ஏமாற்றி, ரூ. 200 கோடிக்கு மேல் பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அசாம்கான் தலைமையின் கீழ் நால்வரும் தனிக்குழுக்களாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து 21 மொபைல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டு, 1 லேப்டாப், 64 ஏ.டி.எம்., கார்டுகள், ரூ. 41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் கூறுகையில், 'இணைய வழியில் வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமான எந்த செய்தியையும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். அதனுடைய உண்மை தன்மை அறிந்த பிறகு பணம் செலுத்துங்கள் என' கூறினர்.
கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டில்லி, அசாம் உள்ளிட்ட 9 மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் மோசடி கும்பலை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.