ADDED : ஜூலை 26, 2026 06:24 PM
புதுச்சேரி: மூலக்குளம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த ரவுடி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து, 250 கிராம் கஞ்சா, 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, மூலக்குளம், வில்லியனுார் மெயின் ரோட்டில் இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், கருவடிக்குப்பம், கால்நடை மருத்துவமனை தெருவைச் சேர்ந்த ரவுடியான சக்திவேல் மகன் ஆட்டோ மணி (எ) மணிகண்டன், 30; மூலக்குளம், வில்லியனுார் மெயின் ரோட்டைச் சேர்ந்த சங்கர் மகன் தேவன், 30; மூலக்குலம், ஜெ.ஜெ., நகர், 9வது குறுக்கு தெருவை சேர்ந்த யோகநாதன் மகன் சரண், 23; களத்துமேடு, எம்.ஜி.ஆர்.வீதியை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் திவாகர், 23, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தபோது, 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து, பொதுமக்கள், தொழிலாளர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோ மணி, தேவன், சரண், திவாகர் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதில், ரவுடியான ஆட்டோ மணி மீது 4 கொலை வழக்குகள், அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
