ADDED : ஜூலை 05, 2026 06:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 28 ஆயிரம் இழந்துள்ளனர்.
வாதானுாரைச் சேர்ந்தவரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு, குறைந்த வட்டியில் ரூ. 17 லட்சம் வரை லோன் பெற்று தருவதாக கூறினார்.
இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, மர்மநபருக்கு ரூ. 16 ஆயிரம் செலுத்தியபின், மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் திருப்பதி தரிசனத்திற்கான ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்ய தேடியுள்ளார். அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், டிக்கெட் புக்கிங் செய்ய முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பிய அவர், மர்மநபருக்கு ரூ. 7 ஆயிரத்து 200 செலுத்தி ஏமாந்தார்.
இதேபோல், சுல்தான்பேட்டையை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 400, சூரமங்கலத்தை சேர்ந்தவர் ஆயிரத்து 495, புதுச்சேரியை சேர்ந்தவர் ஆயிரத்து 500 என, 5 பேர் மோசடி கும்பலிடம் 28 ஆயிரத்து 595 ரூபாய் இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
