செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த சிறார்கள் உட்பட 51 பேர் மீட்பு
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த சிறார்கள் உட்பட 51 பேர் மீட்பு
ADDED : மே 06, 2026 06:41 PM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த, 27 சிறுவர்கள் உள்பட, 51 பேர் மீட்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஹரிஹரன் என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகள் உள்ளதாக வந்த தகவலின் பேரில், மாவட்ட சட்டப்பணிகள் மீட்பு குழு செயலாளர் நீதிபதி ஜெனிதா தலைமையில், கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தராமன், தாசில்தார் பலராமன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
அங்கு கடந்த 6 ஆண்டுகளாக, அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பு, பணப்பாக்கம், எனதிரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 18 வயது நிரம்பாத 27 சிறுவர்கள் உள்ளிட்ட, 51 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்வது தெரிய வந்தது. அவர்கள் அனைவரையும் மீட்ட அதிகாரிகள், கடலுார் வேணுகோபாலபுரம், பள்ளியில் தங்க வைத்தனர்.
மீட்பு பணியின் போது, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் , சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயமூர்த்தி, துணை தாசில்தார் கரிகாலன், வி.ஏ.ஓ., ரகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மீட்கப்பட்ட அனைவருக்கும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை வருவாய்த்துறை விரைந்து வழங்கவும், சிறுவர்கள் பள்ளி படிப்பு மேற்கொள்ளவும், பாதிப்பு ஏற்படுத்திய செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி ஜெனிதா அறிவுறுத்தினார்.
