நுாலக உதவியாளர் போட்டி தேர்வு 53.53 சதவீதம் பேர் ‘ஆப்சென்ட்’
நுாலக உதவியாளர் போட்டி தேர்வு 53.53 சதவீதம் பேர் ‘ஆப்சென்ட்’
ADDED : மே 31, 2026 11:51 PM

புதுச்சேரி: நுாலக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், விண்ணப்பித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பங்கேற்காததால் தேர்வு மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் நிலவி வரும் பணியிடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 26 இளநிலை நுாலக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1 கேலரி அசிஸ்டென்ட் என, மொத்தம் 27 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதில், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21,688 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடந்து.
தேர்வு எழுத புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் தாகூர் கலைக்கல்லுாரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, திருவள்ளுவர் மற்றும் வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், பெத்தி செமினார் பள்ளி, அமலோற்பவம் பள்ளி உள்ளிட்ட 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காரைக்காலில் 9 மையங்கள், மாகேவில் 2 மையங்கள், ஏனாமில் 5 மையங்கள் என மொத்தம் 59 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்வை வெறும் 10,078 பேர் மட்டுமே எழுதினர். 11,610 தேர்வர்கள் வரவில்லை. 53.53 சதவீதம் ஆப்சென்ட் ஆனதன் காரணமாக, பல தேர்வறைகள் வெறிச்சோடின.
தேர்வு மையங்களை தேர்வு கட்டுப்பாட்டாளர் பங்கஜ்குமார் ஜா தலைமையில், மாவட்ட பதிவாளர் மாணிக்கதீபன், நிதித்துறை இணை செயலர் ரத்னகோஷ் கிஷோர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் சார்பு செயலர்கள் முருகேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
முன்னதாக காலை 8:00 மணிக்கே தேர்வர்கள் மையங்களுக்கு வரத் தொடங்கினர். காலை 9:30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. அதன் பிறகு, வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாளச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, பயோ-மெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யப்பட்ட பின்னரே தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
