கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நர்சிங் மாணவர்கள் உட்பட 7 பேர் கைது
கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நர்சிங் மாணவர்கள் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2026 05:42 PM
பாகூர்: கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நர்சிங் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லுாரி அருகே கஞ்சா விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லுாரி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கல்லுாரி அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டனில் உள்ள அபார்ட்மென்டில் இருந்து கஞ்சா புகைக்கும் வாடை வீசியது. சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா புகை வந்த அறையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அந்த அறையில் 4 பேர் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனார். அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம், தலைச்சங்காடு பகுதியைச் சேர்ந்த இளையராஜா மகன் சுமன்ராஜா, 21; கடலுார் மாவட்டம், பண்ருட்டி, நந்தம் பாரதியார் தெரு மூர்த்தி மகன் புருஷோத்தமன்,20; காட்டுமன்னார்கோவில், புலியங்குடி, கோபு மகன் அஜய், 21, புதுச்சேரி, திலாஸ்பேட்டை, வீமன் நகர் ஹாசாத் அலி மகன் அப்துல் நபில்,21; என்பதும், அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் இறுதியாண்டு படித்து வருகின்றனர்.
அவர்கள், கல்லுாரி நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கஞ்சாவை வாங்கி வந்து தாங்களும் பயன்படுத்துவதோடு, சக மாணவர்களுக்கும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 160 கிராம் கஞ்சா, எடை இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இவர்களுக்கு துணையாக இருந்த கல்லுாரி நண்பர்களான, கடலுார், புதுப்பாளையம், அப்பாவு வீதி, விஸ்நாதன் மகன் சுதர்சன், 23; காட்டுமன்னார்கோவில், ரம்ஜான் தைக்காலை சேர்ந்த அசாத்துல்லா மகன் ஷேக் ஆசிப், 22; மற்றும் தனியார் நிறுவன ஊழியரான பாஷா மகன் ஆஷிக் அலி, 26, ஆகியோரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் கஞ்சாவை, காரில் சென்று குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதனை சிறு சிறு பொட்டலங்களாக பேக் செய்து, மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து, அதில் வந்த பணத்தை ஜாலியாக செலவழித்து வந்தது தெரிய வந்தது.
பின், ஏழு பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். இதில், மாணவர் சுமன்ராஜா மீது ஏற்கனவே கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
