/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு
/
புதுச்சேரியில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு
ADDED : மே 02, 2024 01:11 AM
புதுச்சேரி : புதுச்சேரி நகர வீதிகளில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி காந்தி வீதியில் நேற்று மாலை 5:00 மணிக்கு, 45 வயது மதிக்க தக்க நபர், உடலில் ஒட்டு துணி இன்றி நிர்வாணமாக நடந்து சென்றார்.
மெட்ராஸ் பேப்பர் மார்ட் கடை துவங்கி அஜந்தா சிக்னல் நோக்கி வேகமாக ஓடிய நிர்வாண ஆசாமி, திடீரென திரும்பி நேரு வீதி நோக்கி வேகமாக நடந்தார். சாலையில் சென்ற பெண்கள் நிர்வாண ஆசாமியை கண்டு முகம் சுளித்தனர்.
காந்தி சாலையில் நடந்து சென்ற நிர்வாண ஆசாமி, திடீரென ஒரு ஸ்விட் ஸ்டாலுக்குள் புகுந்தார்.
அங்கிருந்த வாடிக்கையாளர்கள் வெளியே ஓடினர். மேசை மீது வைத்திருந்த ஸ்வீட் ஒன்றை எடுத்து சாப்பிட்டப்படி நிர்வாண ஆசாமி வெளியே வந்தார்.
காந்தி வீதி வழியாக சென்று, செட்டி தெருவில் வளைந்து கடற்கரை நோக்கி நடந்து சென்றார். இது தொடர்பாக, பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் செட்டி தெருவில் நடந்து சென்ற நிர்வாண ஆசாமியை பிடித்து, கடும் சிரமத்திற்கு பிறகு உடைகள் அணிவித்தனர். விசாரணையில், நிர்வாண ஆசாமி சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அவரை, அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு, மன நலம் பாதித்தவர்களை பாதுகாக்க வார்டு இல்லை, கதிர்காமம் மருத்துவ கல்லுாரிக்கு அழைத்து செல்லுங்கள் என, தெரிவித்தனர்.
அங்கிருந்து கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர் அனுமதிக்க தனி வார்டு இல்லை என திருப்பி அனுப்பினர். அந்த நபரை எங்கு அழைத்து சென்று விடுவது என தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.
அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சமீபத்தில் ஒதியஞ்சாலையில் மாயமாகி தேடப்பட்டு வருபவர் என தெரியவந்தது.
உடனடியாக மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அந்தநபரை ஒப்படைத்த பிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

