ADDED : மார் 09, 2025 03:50 AM

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகில், ஓட்டலுக்குள் புகுந்த புள்ளி மானால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நீர்நிலைகள் வற்ற துவங்கி உள்ளன. இதனால் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவிற்காக அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் வந்து செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வள்ளலார் நகரில் உள்ள சாலையோர ஓட்டலுக்குள் நேற்று காலை 9:00 மணியளவில் புள்ளி மான் ஒன்று புகுந்தது. அங்கு தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்தது.
இதை அங்கிருந்தவர்கள் மொபைல் போனில், வீடியோ எடுத்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு, அங்கிருந்து துள்ளிக்குதித்து தப்பி ஓடியது. இதில், மானின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.