ADDED : ஜூன் 03, 2026 11:43 PM
இப்பகுதியில் கடந்த வாரம் பெண்களுக்கு மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கான யோகா சிகிச்சை முறைகளை பார் த்தோம். இந்த வாரம், உடல் ஆரோக்கியத்திற்கான யோகா அணுகுமுறைகளை பார்ப்போம்.
உத்கட்டாசனம் உங்கள் பாதங்களை நன்கு தரையில் பதியவைத்து குத்திட்டு அமரவும். உங்களைத் தழுவிக்கொள்வது போல் உங்கள் கைகளால் உங்கள் கால்களைச் சுற்றிபிடித்துக் கொள்ளுங்கள். உங்களை நன்றாக கட்டிப்பிடித்து, வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தை உணருங்கள். அனைத்து உள் உறுப்புகளுக்கும் நல்ல மசாஜ் கொடுக்கப்பட்டு, செரிமான மற்றும் சிறுநீர் அமைப்புகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன. தயாரானதும் இந்த நிலையை விடுவித்து எதேனும் ஒரு உட்காரும் நிலைக்கு வரவும். உங்கள் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் புதிய ரத்த ஓட்டத்தை அனுபவிக்கவும்.
பத்ம ஆசனம் கால்களை முன்னால் நீட்டி தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடையில் முடிந்தவரை வைக்கவும். இடது காலை மடித்து. இடது பாதத்தை, வலது தொடையின் மேலே வைக்கவும். முடிந்தவரை நேராக உட்கார்ந்து எதேனும் ஒருஹஸ்த முத்திரையை செய்யுங்கள். மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிக்கவும்.
பத்மாசனம், தாமரை ஆசனம் ஹத யோகாவின் பாரம்பரியயோக ஆசனங்களில் ஒன்றாகும். மேலும் இது தியானத்திற்கான சிறந்த ஆசனமாகும். இந்த தோரணை ஒருபோதும் கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. இல்லையெனில் முழங்கால் அல்லது கணுக்காலில் ஏற்படும்வலியைப் போக்க பல மாதங்கள் ஆகலாம்.
மெதுவாக உடலை தளர்த்தி, கால்களை முன்னால் நீட்டவும். கால்களை அசைத்து, தொடைகளை சில முறை தட்டவும். தியான நிலைக்கு இடது பாதத்தின் மீது வலது காலை வைத்து செய்யுமாறு கற்பிக்கப் படுகிறது. ஞான முத்திரையைச் செய்து, மெதுவாகவும் ஆழமாக சுவாசிக்கவும். முழங்கால் மூட்டுகளில் கடுமையான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
பரிவ்ரித்த திரிகோண ஆசனம் சமஸ்திதி ஆசனத்தில் நிற்கவும். உங்கள் கால்களை இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளியில் முன்னே பார்த்தவாறு வைக்கவும். மார்பை விரித்து எதிர் திசைகளில் இழுக்குமாறு கைகளை பக்கங்களில் நீட்டவும். தலையையும் வலது காலையும் வலது பக்கமாகத் திருப்பி, உங்கள் வலது கையை வலது பாதத்திற்கு மெதுவாகக் கொண்டு வந்து, உள்ளங்கையை வலது பாதத்தின் முன் தரையில் வைக்கவும். இடது கையின் நடுவிரலை மேலே நோக்கி உயர்த்தவும்.
முழு உடலும் நல்ல திருப்பமும், நீட்சியும் பெறுவதை உணரலாம். இந்த நிலையில் 30 விநாடிகள் ஆழ்ந்து சுவாசிக்கவும். மீண்டும் கைகள் திறந்த நிலைக்கு வந்து, இடது பாதத்தின் முன் இடது கையை கீழே வைத்து எதிர் பக்கம் செய்யவும். இந்த நிலையில் 30 விநாடிகள் ஆழ்ந்து சுவாசிக்கவும். மெதுவாக மீண்டும் சமஸ்திதி ஆசனத்திற்கு வந்து சில சுற்றுகள் ஆழ்ந்த மூச்சுடன் ஓய்வெடுக்கவும்.
மயூராசனம் வஜ்ராசனத்தில் உட்கார்ந்து, பின்னர் முழங்கால் மூட்டை சற்று தள்ளி வைத்து தரையில் மண்டியிடவும். விரல்கள் உடலை நோக்கியவாறு இரு கைகளையும் தரையில் வைக்கவும். முன்கைகளை ஒன்றாக வைத்திருக்கும் போது முழங்கைகளை மடித்து, வயிற்றின் நடுப்பகுதியை முழங்கையின் மீது வைக்கவும். அடிவயிற்றில் ஒரு நல்ல அழுத்தத்தையும் கைகளில் நல்ல படியையும் பெற முயற்சிக்கவும். கால்களை ஒவ்வொன்றாக நேராக்கி உடலின் முழு எடையையும் கைகளில் கால் விரல்களிலும் தாங்கவும். மூச்சை வெளியேற்றி, இரு கால்களையும் தரையில் இருந்து உயர்த்தி, உங்கள் முழு உடலும் தரையில் இணையாக இருக்கும் நிலைக்கு வர முயற்சிக்கவும்.
கடுமையான கீழ் முதுகு காயங்கள் மற்றும் மூட்டுவலி உள்ளவர்கள் இந்த நடைமுறையைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடலிறக்க நோயாளிகள் மற்றும் உள்-வயிற்று இடைவெளியை புண்கள் இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த நிலை உள்வயிற்று அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ள நோயாளிகள் தங்கள் மருத்துவ நிலையைப் பொறுத்து எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும்.
பிற ஆசனங்களை அடுத்த வாரம் பார்ப்போம்...
