ADDED : ஏப் 20, 2024 04:58 AM

பாகூர் : சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய குடியுரிமை பெற்ற இளம் பெண் வாக்காளர், கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒட்டு சாவடியில், தனது முதல் ஓட்டை பதிவு செய்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. கிருமாம்பாக்கத்தில், உள்ள ஓட்டுச் சாவடியில் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய குடியுரிமை பெற்ற இளம் பெண் வாக்காளர் புவியரசி, 18, தனது தாய் மாலதி ஆறுமுகத்துடன் சிங்கப்பூரில் இருந்து வந்து முதல் ஓட்டை பதிவு செய்தார்.
இதற்காக அவர் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து காரில் கிருமாம்பாக்கம் வந்து தனது முதல் ஓட்டை பதிவு செய்தார்.
இது குறித்து புவியரசி கூறுகையில் 'நான் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். இந்த தேர்தலில் எனது முதல் ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என ஆர்வமுடன் காத்திருந்தேன்.
அதனால், சிங்கப்பூரில் இருந்து எனது தாயுடன் வந்து என் முதல் ஓட்டை பதிவு செய்துள்ளேன். எனது தந்தை படித்த பள்ளியில், எனது முதல் ஓட்டை பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
