/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வறண்டு கிடக்கும் வரலாறு படைத்த ஆயி குளம்
/
வறண்டு கிடக்கும் வரலாறு படைத்த ஆயி குளம்
ADDED : ஜூன் 30, 2024 05:34 AM

கிருஷ்ணதேவராயர் தமது ஆளுமைக்கு உட்பட்ட புதுச்சேரியை பார்க்க வரும்போது, முத்திரையார்பாளையத்தில் இருந்த ஒரு கோவில் போன்ற மாளிகையை கண்டு வணங்கினார். அது தாசி ஆயி இல்லம். தாசியின் இல்லத்தை கண்டு மன்னர் கும்பிடுவதை கண்ட சிலர் சிரித்தனர். உண்மை அறிந்த கிருஷ்ணதேவராயர் கோபம் கொண்டு ஆயி மாளிகையை இடிக்க உத்தரவிட்டார்.
ஆயி தனது மாளிகையை இடிக்க அவகாசம் பெற்று, அந்த இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குளம் வெட்டினார். அதுவே ஆயி குளம் என அழைக்கப்பட்டது. பிரஞ்சு ஆட்சியில் புதுச்சேரி நகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கவர்னராக இருந்த போன்டெம்ஸ் வேண்டுகோளின்பேரில், பிரஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அனுப்பி வைத்த பொறியாளர் லாமைரெஸ்சே ஆயி குளத்தில் இருந்து பாரதி பூங்கா உள்ள இடம் வரை கால்வாய் வெட்டினார். இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தீர்ந்தது.
மாளிகையை இடித்து குளம் வெட்டி மக்கள் தாகம் தீர்த்த ஆயியின் கதை அறிந்த மூன்றாம் நெப்போலியன், கிரேக்க ரோமானிய கட்டிட கலை அழகுடன் கடந்த 1852 -1870ம் ஆண்டில் பாரதி பூங்கா நடுவில் ஆயி நினைவு மண்டபம் கட்டினார். ஆயி மண்டபம் புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகவும் திகழ்கிறது.
அந்த காலத்தில் ஆயி குளத்தில் இருந்து கால்வாய் வழியாக நீர் கொண்டு நகர பகுதி மக்கள் தாகம் தீர்க்கப்பட்டது. தற்போது ஆயி குளம் அருகே 27 போர்வேல்கள் அமைத்து தண்ணீரை உறுஞ்சி எடுத்து நகர பகுதி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, தெற்கில் முதலியார்பேட்டை வரை குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் அனுப்பட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தேக்கி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆயி குளம் அமைந்துள்ள பகுதி இன்றும் புதுச்சேரி மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது. அத்தகைய சிறப்பு மிக்க ஆயி குளம் 2 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருந்தாலும் தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. குப்பைகள் குவிந்து கிடந்த ஆயி குளத்தை புரனமைக்க கடந்த பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.
உழவர்கரை நகராட்சி இதில் ரூ. 95 லட்சம் செலவில் குளம் புனரமைக்கும் பணியை மேற்கொண்டது. குளத்தினை ஆழப்படுத்தி, கரைகள் மட்டுமே கட்டப்பட்டது.
மேலும் ஊசுட்டேரியில் இருந்து வரக்கூடிய உபரி நீர் ஆயி குளத்தில் சேரும் வகையில் வடிகால் வாய்க்கல் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்போது கழிவுநீர் மட்டுமே வருவதால், தடுப்பு அமைத்துள்ளனர்.
குளத்தின் கரையை கான்கிரீட் கொண்டு பலப்படுத்தி, நடைபாதைகள், இருக்கை, மின் விளக்குகள் அமைக்கவும், ஊசுட்டேரி வடிகால் வாய்க்காலில் வரும் நீரை சுத்திகரித்து குளத்தில் விடவும், குளத்தின் மத்தியில் ஆயி சிலை அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.