/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடுகளுக்கு மின் கட்டண மானியம் யூனிட்டிற்கு 45 பைசா: மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
வீடுகளுக்கு மின் கட்டண மானியம் யூனிட்டிற்கு 45 பைசா: மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
வீடுகளுக்கு மின் கட்டண மானியம் யூனிட்டிற்கு 45 பைசா: மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
வீடுகளுக்கு மின் கட்டண மானியம் யூனிட்டிற்கு 45 பைசா: மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
UPDATED : செப் 03, 2024 06:42 AM
ADDED : செப் 03, 2024 06:37 AM

புதுச்சேரி : வீடுகளுக்கு மின் கட்டண மானிய திட்டத்தினை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. யூனிட்டிற்கு 45 பைசா வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியினர் நேற்று தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்து, பந்த் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தில் வீடுகளுக்கு மானியம் அளிப்பதற்கான கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
மின் கட்டண மானியம் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
மின் கட்டண உயர்வினை புதுச்சேரி அரசு முடிவு செய்வதில்லை. மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் தான் மின் கட்டணத்தை முடிவு செய்கிறது. தமிழகத்தில் கூட மின் கட்டண உயர்வு பிரச்னை எதிரொலித்தது. இதேபோல் தான் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின. தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கு உள்ள மின் கட்டணத்தை கணக்கிட்டால், புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவு தான். இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணத்தால், மின் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏழை மக்கள் பாதிக்காத வகையில், அந்த மின் கட்டணத்தை மானியமாக கொடுத்து குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதற்கான ஒப்புதலை கவர்னர், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடுத்துள்ளனர். எனவே ஏழை மக்கள் மின் கட்டணத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
புதிய மின் கட்டண மானிய திட்டத்தின் கீழ், அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு 2.70 ரூபாய் கட்டணம். அரசு மானியமாக யூனிட்டிற்கு 45 பைசா வழங்கும். இதன் மூலம் கடந்த ஆண்டில் பொதுமக்கள் செலுத்திய யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 என்ற அதே கட்டணத்தை செலுத்துவர்.
மேலும் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்சாரத்திற்கு அரசு மானியமாக யூனிட்டிற்கு 40 பைசா வழங்கப்படும். இதன் மூலம் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான வீட்டு மின் நுகர்வோர் மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள யூனிட்டிற்கு 4 ரூபாய்க்கு பதிலாக 3.60 ரூபாய் யூனிட்டிற்கு மட்டுமே செலுத்தினால் போதுமானது.
இந்த மானியம் 16.06.2024 முதல் இந்த நிதியாண்டில் நடைமுறையில் இருக்கும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் கீழ் உபயோகப்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீத அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரியில் 300 யூனிட்டிற்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கு 7.50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்களுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு 9.65 ரூபாய், 400 யூனிட்களுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு 10.70 ரூபாய், 500 யூனிட்டிற்கு மேல் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கு 11.80 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பதை மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
எனவே புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் பிற மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது. இதற்கு முன் இருந்த அரசுகள் 300 கோடிக்கு மேல் மின் துறையில் நஷ்டத்தை ஏற்படுத்தி வைத்துவிட்டனர். அந்த நஷ்டம் தான் அரசு மீதும், பொதுமக்கள் மீதும் வந்து விழுந்துவிட்டது. மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு பணம் கட்டாத சூழல் நிலவுகிறது. கோடி கணக்கில் நிலுவையில் உள்ளது. அந்த பணத்தை கொடுக்காவிட்டால் நமக்கு மின்சாரம் கொடுக்க மின் விநியோக நிறுவனங்கள் தயாராக இல்லாத சூழல் ஏற்பட்டு விடும்.
மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விடும், இப்போது கூட மின் துறை 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தாலும் அந்த தொகை கூட மின்சாரம் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு தான் செல்லுகிறது. மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் கூறி கட்டணத்தை ஏற்றாவிட்டால், அவர்கள் நேரடியாக அதிக மின் கட்டணம் ஏற்றும் சூழலும் உள்ளது. மின் கட்டண உயர்வினை அரசு மானியமாக கொடுத்து மக்களை அரசு பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.