/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை
/
கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை
கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை
கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மே 28, 2024 04:10 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பள்ளி கல்லுாரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு எல்.கே.ஜி. முதல் கல்லுாரி வரையிலான நுாறு சதவீத கல்வி கட்டணம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அளிக்கப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமியின் உத்தரவுப்படி, தேர்தல் துறையில் விலக்கு பெற்று, ஆதிதிராவிடர் மாணவர்களின் கடந்த ஆண்டு கல்வி கட்டண பாக்கி ரூ. 38 கோடி அந்தந்த பள்ளி, கல்லுாரிகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், சில பள்ளி கல்லுாரிகள் ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரி, வட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் பேசுகையில்; ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக கல்வி உதவி திட்டம் உள்ளது. சில பள்ளிகள் முன்னதாக கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக புகார்கள் வருகிறது.
எக்காரணம் கொண்டும் கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பள்ளி கல்லுாரிகள் பெற வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்.
தற்போது இரண்டு விதமான கல்வி ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
பூர்வீக ஆதிதிராவிட மாணவர்களுக்கு நுாறு சதவீத கல்வி கட்டணமும், இடம்பெயர்ந்த ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தேசிய ஸ்காலஷிப் மூலம் உதவி தொகை அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு பூர்வீக ஆதிதிராவிடர் மாணவர்கள் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இரண்டையும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வித்தொகை மாணவர்கள் பெயரில் வரவு வைக்கப்படுகிறது.
கல்வி கட்டணத்தை பெறுவதில் பள்ளிகளுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நோடல் அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவித்தார்.