/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லித்தோப்பு கோவிலில் அம்மன் நகை திருட்டு
/
நெல்லித்தோப்பு கோவிலில் அம்மன் நகை திருட்டு
ADDED : மே 15, 2024 12:52 AM

புதுச்சேரி, : நெல்லித்தோப்பு முத்தாலம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மற்றும் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலியை மர்ம நபர்கள் திருடிச் செனற் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு சிக்னல் அருந்ததி நகரில், மரவாடி அருகே முத்தாலம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன், புனரமைத்து, ஜனவரி 23ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிேஷகம் முடிந்தும் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறந்து சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றனர்.
கோவிலுக்குள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கோவிலின் பின்பக்க மதில் சுவர் வழியாக ஏறி குதித்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிக் கொண்டு, கோவில் சூலத்தை கொண்டு மூலவர் சன்னதியின் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த 9 கிராம் தாலி மற்றும் குத்து விளக்குகளை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
உருளையன்பேட்டை பகுதியில் இதற்கு முன்பு 3 கோவில்கள் உண்டியல் உடைத்து காணிக்கை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. தற்போது 4வது கோவிலில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

