புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவியேற்பு
புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவியேற்பு
ADDED : மே 18, 2026 08:22 PM

புதுச்சேரி: புதுச்சேரி 16வது சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நேற்று பொறுப்பேற்றார். நாளை (20ம் தேதி) புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கின்றனர்.
புதுச்சேரியில் 16வது சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி 18 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரங்கசாமி கடந்த 13ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பதற்காக முதல்வர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகனை தற்காலிக சபாநாயகராக நியமிக்க கைலாஷ்நாதன் அனுமதித்தார். அதையடுத்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழா லோக் நிவாசில் நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அன்பழகன் கடவுளின் பெயரில் உறுதிமொழி ஏற்று, தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். அதன்பிறகு சட்டசபைக்கு சென்ற அன்பழகனை, சபாநாயகர் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி அமர வைத்து வாழ்த்தினார்.
தற்காலிக சபாநாயகராக பதவியேற்ற அன்பழக னுக்கு, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், செல்வகணபதி எம்.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தலைமை செயலர் சரத் சவுகான் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
