காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்திற்கு ஏனாம் என்.ஆர்.காங்., தலைவர் கண்டனம்
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்திற்கு ஏனாம் என்.ஆர்.காங்., தலைவர் கண்டனம்
ADDED : ஜூலை 23, 2026 11:53 PM
புதுச்சேரி: ஏனாமில் புஷ்கர் விழா நடத்துவதை விட திருக்காஞ்சியில் நடத்தலாம் என, கருத்து தெரிவித்த காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,க்கு, ஏனாம் என்.ஆர்.காங்., தலைவர் மல்லாடி சாமுவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோதாவரி ஆற்றங்கரையில் புஷ்கர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் சார்பில், 2027ம் ஆண்டு ஜூன் 26 முதல் ஜூலை 7 வரை கோதாவரியில் புஷ்கர் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு, புதுச்சேரி அரசு சார்பில், ஏனாமில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் புஷ்கர விழாவை நடத்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு நடந்த விழாவில் தினசரி 1.5 லட்சம் பக்தர்கள் ஏனாம் வந்து புனித நீராடினர். வரும் 2027ம் ஆண்டு புஷ்கர விழாவில் நாள்தோறும் 5 லட்சம் பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்புக்களுக்காக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் மத்திய அரசிடம் ரூ. 48 கோடி நிதி உதவி கோரியிருந்தார். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சிறிய ஊரான ஏனாமில் புஷ்கர் விழா நடத்தாமல் திருக்காஞ்சியில் நடத்த வேண்டுமென கூறியிருக்கிறார். புதுச்சேரியில் வைத்திலிங்கம் விரும்பும் இடத்தில் புஷ்கர் விழாவை நடத்தி கொள்ளலாம். இதற்கு ஏனாம் மக்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், ஏனாம் மக்களை கேலி செய்யும் வகையில் அவர் பேசுவது சரியானதல்ல. இது ஏனாம் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
