புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 19, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, அடுத்த கட்டமாக உயர்தர தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த முதுகலைப் படிப்புகளைத் தொடரக் காத்திருக்கும் மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ சேர்க்கை அறிவிப்பை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பாடப்பிரிவுகள்:: இக்கல்வியாண்டில், சமகால வேலைவாய்ப்புச் சந்தையில் அதிக தேவையுள்ள மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., மெட்ரீயல் சையின்ஸ் டெக்னாலஜி உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலைப் படிப்பு இடங்கள், மட்டுமின்றி தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பக் காலம்:: மாணவர்கள் வரும் 26ம் தேதி வரை தங்களின் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கையில் பங்கேற்கும் கல்லுாரிகளின் பட்டியல், பாடப்பிரிவுகளின் விவரங்கள், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதிகள் மற்றும் அந்தந்த பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து விரிவான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் www.ptuniv.edu.in www.pgacpdy.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
2026– 27ம் கல்வியாண்டிற்கான இந்த முதுநிலை மாணவர் சேர்க்கையானது, பல்கலைக்கழகத்தால் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள முதுகலைச் சேர்க்கைக் குழு மூலம் முறைப்படி வழிநடத்தப்படவுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறையில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த சேர்க்கை அறிவிப்பு ஒரு சிறந்த நல்வாய்ப்பாகும். தகுதியான மாணவர்கள் காலக்கெடு முடிவடைவதற்குள் உரிய விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்து, விரைவாக விண்ணப்பிக்கலாம் என, சேர்க்கை குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
