/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரம்பரிய விளையாட்டுகள் பள்ளி அளவில் ஊக்குவிக்கப்படுமா?
/
பாரம்பரிய விளையாட்டுகள் பள்ளி அளவில் ஊக்குவிக்கப்படுமா?
பாரம்பரிய விளையாட்டுகள் பள்ளி அளவில் ஊக்குவிக்கப்படுமா?
பாரம்பரிய விளையாட்டுகள் பள்ளி அளவில் ஊக்குவிக்கப்படுமா?
ADDED : ஆக 01, 2024 06:06 AM
புதுச்சேரி: பாரம்பரிய விளையாட்டுகளை பள்ளி அளவில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்துமே உடல்நலம், மன நலம், சிந்தனை, மொழி, பண்பாடு, கணிதம், வாழ்வியல், விடாமுயற்சி, நிர்வாகம் என அனைத்தையும் மேம்படுத்துவதாகவே உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்றைய குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டை மறந்துவிட்டு மொபைல் கேம்களில் மூழ்கி, வேறு திசையில் செல்லுகின்றனர்.
நகரங்களில் பாரம்பரிய விளையாட்டுகளின் ஆர்வம் மங்கியுள்ளது. தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், பம்பரம், சதுரங்கம், பச்சை குதிரை, மூன்று கல் ஆட்டம், உப்பு மூட்டை துாக்கல், கோலி, கிச்சு கிச்சு தாம்பலம், கில்லி, ஒத்தையா-ரெட்டையா, கரகர வண்டி, சீதை பாண்டி, ஒரு குடம் தண்ணி ஊத்தி, குலை குலையா முந்திரிக்காய், நொண்டி உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள் பழங்காலத்தில் இருந்து உள்ளன.
இந்த விளையாட்டுகளில் பலவும் நமது நினைவாற்றலை மேம்படுத்தவும், கணிதத் திறனை வளர்க்கவும் மன அழுத்தத்தையும் சோர்வையும் விரட்டி உடலை புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
உதாரணமாக பல்லாங்குழியை சொல்லலாம், 12 குழிகள் உள்ள பலகையில் புளியம்பழ விதைகள் அல்லது சோழிகளை கொண்டு விளையாடுவதால் நினைவற்றல் கூடுகிறது.
பல்லாங்குழி விளையாடும்போது முத்துப்பாண்டி எடுப்பதால் சிறுவர்களுக்கு கணித அறிவும் வளரும்.
இதேபோல் தான் தாயம் விளையாட்டில் இருவர் அல்லது நால்வர் இணைந்து நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் யார் சதுரங்க பலகையில் உள்ள மற்றவர்களின் காய்களை வெட்டி அவர்களிடம் தப்பித்து வெற்றி பெறுவார் என்பதே சுவராசியமாக இருக்கும்.
இருப்பினும், இன்றைய காலக்கட்டத்தில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் சிறுவர்கள் மொபைல்போனை எடுத்துக்கொண்டு மூளையில் உட்கார்ந்து விடுகின்றன. பாரம்பரிய விளையாட்டுகள் மெல்ல மெல்ல காணாமல் போய் வருகின்றன.
இதனால் நம் நினைவுகளில் மட்டுமே எஞ்சி இருக்கும் ஒருசில விளையாட்டுகளையாவது இன்றைய தலைமுறையினருக்கு நாம் கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி அளவில் இருந்தே அரசு திருவிழாவாக கொண்டாடினால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துயிர் கிடைக்கும். இதற்கான முயற்சிகளை பள்ளி கல்வித் துறை வாயிலாக புதுச்சேரி அரசு முன்னெடுக்க வேண்டும்.