/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயற்கை மின் வெட்டு? எதிர்கட்சியினர் புகார்
/
செயற்கை மின் வெட்டு? எதிர்கட்சியினர் புகார்
ADDED : ஏப் 16, 2024 06:50 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
லோக்சபா தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் இரவு, பகலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி, விழுப்புரம் அடுத்த வளவனுார், கோலியனுார் பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளரின் பிரசாரத்தின்போது, இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை மின் வெட்டு ஏற்பட்டது. எதிர்கட்சி என்பதால், செயற்கை மின்தடை ஏற்படுத்துவதாக அ.தி.மு.க.,வினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதேபோல், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, மாவட்டத்தில் பரவலாக திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அடுத்த 30 நிமிடத்தில் விழுப்புரத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், வளவனுார், கோலியனுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் வரை மின்வெட்டு நீடித்தது.
விக்கிரவாண்டியில் பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரத்தின்போது மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், தேர்தல் பிரசாரத்தில் நெருக்கடி கொடுக்க மின் வெட்டு ஏற்படுத்துவதாக எதிர்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'விழுப்புரத்தில் உள்ள 230 கே.வி.ஏ., தானியங்கி துணை மின் நிலையத்திற்கு வரும் அதி உயர்மின்னழுத்த மின் பாதையில், நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட மின்தடை காரணமாக விழுப்புரம், வளவனுார் உள்ளிட்ட பல துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் பாதித்தது.
மாலை 6:20 மணியளவில், நெய்வேலியில் இருந்து வரும் 230 கே.வி.ஏ., பவர் கிரீட் மின்னுாட்டிகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்பட்டது.
உடனே விழுப்புரம், திருப்பாச்சனுார், அரசூர், கெடார், பூத்தமேடு ஆகிய துணை மின் நிலையங்களுக்கு, மாலை 6:45 மணிக்கு, சென்னை மின்பாதை மூலம் மின்சாரம் பெற்று, மாற்றியமைத்து சீர் செய்யப்பட்டது.
அதன் பிறகு இரவு 8:00 மணிக்கு, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. நெய்வேலி மெயின் லைன் பழுதால் மின் தடை ஏற்பட்டது.
ஏற்கனவே, சில தினங்களுக்கு முன், கோடையில் அதிக பவர் சப்ளை பயன்பாட்டால், ஓவர் லோடு காரணமாக, சில இடங்களில் மின் தடை ஏற்பட்டு, உடனே சரி செய்யப்பட்டது' என்றனர்.

