வீடுகளை காலி செய்ய சென்ற ஆரோவில் நிர்வாகத்தால் பரபரப்பு
வீடுகளை காலி செய்ய சென்ற ஆரோவில் நிர்வாகத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 10, 2026 06:23 PM
புதுச்சேரி: கனகசெட்டிக்குளத்தில், ஆரோவில் பவுண்டேஷன் நிறுவனம் வீடுகளை காலி செய்ய சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரோவில் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு சொந்தமாக கனகசெட்டிக்குளம் கடற்கரையொரம் 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில், எட்டர்னிடி கம்யுனிட்டி என்ற பெயரில், பல ஆண்டுகளாக ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இடத்தை இடப்பரிமாற்ற முறையில், வேறு ஒருவருக்கு வழங்க ஆரோவில் பவுண்டேஷன் நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து அந்த குடும்பங்களை காலி செய்ய சில மாதங்களாக பவுண்டேஷன் சார்பில், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, அந்த ஐந்து குடும்பங்களையும் காலி செய்ய ஆரோவில் பவுண்டேஷன் சார்பில், வலியுறுத்தப்பட்டது. அதற்கு அந்த குடும்பங்களை சேர்ந்தவர்களும், ஆரோவில் வாசிகள் சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இருதரப்பிற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, போலீசார் அங்க குவிக்கப்பட்டனர். காலாப்பட்டு போலீசார் விசாரணையில், ஆரோவில் பவுண்டேஷன் தரப்பில், அங்கு வசிக்கும் ஐந்து குடும்பங்களை காலி செய்ய ஐகோர்ட்டில், உத்தரவு வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வசிப்பவர்கள், ஐகோர்ட் உத்தரவை காண்பிக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து, ஆரோவில் பவுண்டேஷன் சார்பில், உத்தரவு நகலுடன் வருவதாக கூறிச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
