தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்போர்ட்ஸ் பட்டியலில் 30 விளையாட்டுகள்... அதிரடி நீக்கம்:விதிமுறைகளும் முற்றிலும் மாற்றியமைப்பு ; விளையாட்டு துறை அதிரடி அரசாணை

ஸ்போர்ட்ஸ் பட்டியலில் 30 விளையாட்டுகள்... அதிரடி நீக்கம்:விதிமுறைகளும் முற்றிலும் மாற்றியமைப்பு ; விளையாட்டு துறை அதிரடி அரசாணை

ஸ்போர்ட்ஸ் பட்டியலில் 30 விளையாட்டுகள்... அதிரடி நீக்கம்:விதிமுறைகளும் முற்றிலும் மாற்றியமைப்பு ; விளையாட்டு துறை அதிரடி அரசாணை


UPDATED : ஜூலை 16, 2026 02:47 AM

ADDED : ஜூலை 15, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 02:47 AM ADDED : ஜூலை 15, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வரும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, சென்டாக் கலந்தாய்விற்குத் தயாராகி வரும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பைப் போலவே, விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், உயர்கல்வியில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த விதிகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படாததால், நவீன விளையாட்டுப் போட்டிகளின் வளர்ச்சிக்கு அவை தடையாக இருந்தன. இந்தச் சூழலைச் சரிசெய்யும் நோக்கில், விளையாட்டுத் துறை புதிய விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து, அரசாணையாக வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, மாநில அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் 65 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன. தற்போது மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின்படி, அந்த எண்ணிக்கை 35 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பட்டியலில் இருந்த 30 விளையாட்டுகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட விளையாட்டுகள் புதுச்சேரியில் போதிய அளவில் விளையாடப்படுவதில்லை. குறிப்பாக பல விளையாட்டுகளுக்கு மாவட்ட அல்லது மாநில அளவில் கூட ஒரு போட்டி நடத்தப்படுவதில்லை. இப்படிப்பட்ட விளையாட்டுகளுக்கு எப்படி இட ஒதுக்கீடு தரப்படுகின்றது என்று கவர்னர் வரை புகாரும் சென்றது. இதன் காரணமாகவே இந்த 30 விளையாட்டுகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

தொடரும் விளையாட்டுகள் புதிய பட்டியலின்படி, வில்வித்தை, கராத்தே, தடகள போட்டிகள், கயாக்கிங் மற்றும் கேனோயிங், பூப்பந்து, கோ-கோ, பந்து பூப்பந்து, மல்லர்கம்பம், கூடைப்பந்து, வலைப்பந்து, குத்துச்சண்டை மற்றும் பாரா விளையாட்டுகள் ஆகியவை இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.

இவற்றுடன் கேரம், பவர் லிப்டிங், சதுரங்கம், ரோலர் ஸ்கேட்டிங், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், காது கேளாதோர் விளையாட்டு, டேபிள் டென்னிஸ், பென்சிங், டெக்வாண்டோ, கால்பந்து, டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, பளுதுாக்குதல் , ஹாக்கி, மல்யுத்தம், ஜூடோ, யோகாசனம் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் அச்சம் சென்டாக் கலந்தாய்வு நடைபெற உள்ள இந்த முக்கியமான தருணத்தில், விளையாட்டுத் துறையின் இந்த அதிரடி முடிவு, சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மத்தியில் கடும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. விளையாட்டில் சாதித்த தங்களின் எதிர்காலம் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் எனக் கருதுகின்றனர். இம் மாணவர்களும், சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்களும் இந்த முடிவை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us