ADDED : மார் 12, 2025 06:50 AM
புதுச்சேரி: இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தடையை மீறி பலரும் பேனர், கட்அவுட்கள் வைத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கருவடிக்குப்பம் அருகே கோவில் நிலத்தில் கட்டப்பட்ட ஓட்டல் மற்றும் விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது. இதற்காக இ.சி.ஆர்., லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை சந்திப்பு - சிவாஜி சிலை பகுதி வரை போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் வரிசையாக வரவேற்பு பேனர்கள், கொடி கம்பங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் புதுச்சேரி, யூனிட்டி பார்க் நிர்வாக இயக்குனர் சந்துருஜி (எ) ராஜா சந்துரு மீது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சந்துருஜி மீது புதுச்சேரியில் ஏற்கனவே ஏ.டி.எம்., கார்டு மோசடி வழக்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை சந்திப்பு வரை போக்குவரத்திற்கு இடையூராக டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக, முதலியார் பேட்டை போலீசார், அனுமதியின்றி பேனர், கட் அவுட் வைத்த நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.