/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்யாண கோஷ்டிகளால் மீண்டும் அதிகரிக்கும் பேனர்கள்: தகவலின்றி அச்சடிக்கும் பிரஸ்கள் மீது நடவடிக்கை பாயுமா?
/
கல்யாண கோஷ்டிகளால் மீண்டும் அதிகரிக்கும் பேனர்கள்: தகவலின்றி அச்சடிக்கும் பிரஸ்கள் மீது நடவடிக்கை பாயுமா?
கல்யாண கோஷ்டிகளால் மீண்டும் அதிகரிக்கும் பேனர்கள்: தகவலின்றி அச்சடிக்கும் பிரஸ்கள் மீது நடவடிக்கை பாயுமா?
கல்யாண கோஷ்டிகளால் மீண்டும் அதிகரிக்கும் பேனர்கள்: தகவலின்றி அச்சடிக்கும் பிரஸ்கள் மீது நடவடிக்கை பாயுமா?
ADDED : செப் 06, 2024 04:23 AM

புதுச்சேரி: திருமண வாழ்த்து என்ற பெயரில் சாலையில் மீண்டும் பேனர்களை வைப்பது அதிகரித்து வருகிறது. அச்சகத்தின் பெயர்கள் இல்லாமல் பேனர் அடிக்கும் பிரிண்டிங் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோர்ட் நேரடியாக தலையிட்ட பிறகு, புதுச்சேரியில் பேனர்கள் வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேறு வடிவில் சாலையில் டிஜிட்டல் பேனர்கள் இப்போது மீண்டும் முளைத்து வருகின்றன. திருமண வாழ்த்து என்ற பெயரில் கல்யாண கும்பல்கள் மீண்டும் பேனர்களை வைத்து வருகின்றனர். இ.சி.ஆர்., காமராஜர் சாலை, முக்கிய ரவுண்டானாக்கள் என அனைத்து இடங்களிலும் மீண்டும் இந்த கல்யாண டிஜிட்டல் பேனர்கள் அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் திருமண விழாவிற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று தான் இந்த பேனர்கள் சகட்டுமேனிக்கு வைக்கப்பட்டுள்ளன. திருமண விழா முடிந்த பிறகு கூட இந்த பேனர்களை அகற்றுவதில்லை.
புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட்-அவுட்களை உடனே அகற்றவில்லை என்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என, கலெக்டரும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றார்.
சட்ட விரோதமாக பேனர்களை வைப்பவர்களை மீது சப் கலெக்டர்களும் தங்களுடைய பகுதிகளில் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்து, வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் கூட பேனர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கு பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் கடைகள் தான் முக்கிய காரணம்.
பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.
ஆனால், பிரிண்டிங் கடைகள் அச்சடிக்கும் சட்ட விரோத பேனர்களில், பேனர்கள் வைத்தவர்கள் யார், அந்த பேனர்களை அச்சடித்த அச்சகம் எது, அந்த பேனருக்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட எந்த தகவல்களும் இருக்கவே இருக்காது. இதுவே சட்ட விரோத பேனர்கள் சாலையில் முளைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவர்களுக்கு பொதுநலன் பற்றியோ, சமூக அக்கறையோ துளியளவும் இல்லை. பேனர் சம்பந்தமான ஐகோர்ட் ஆர்டர், மாவட்ட கலெக்டர், சப் கலெக்டர் என எவரின் உத்தரவினை மதிப்பதும் இல்லை. கல்லா கட்டினால் மட்டுமே போதும் என்ற மனநிலையிலேயே உள்ளனர்.
சமூக அக்கறை இல்லாமல் சட்ட விரோத பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் கடைகளால் அரசுக்கு தலைவலியும் கெட்ட பெயரும் தான் ஏற்படுகிறது. எனவே சட்ட விரோதமாக பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் கடைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அச்சகத்தின் பெயர் இடம் பெறாமல் பேனர்களை அச்சடித்து, கொடுக்கும் பிரிண்டிங் கடைகளுக்கு அரசு சீல் வைக்க வேண்டும். பேனர்களை வைத்த பிறகு, அதனை அகற்றுவதை விட, பேனர்களை அச்சடிக்கும் கடைகளிலேயே முறைப்படுத்தினால் மட்டுமே சட்ட விரோத பேனர்களை நிரந்தரமாக தடுக்க முடியும். இல்லையெனில் கலெக்டர் உத்தரவு காற்றில் தான் பறக்கும்.