/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
/
பா.ஜ., அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
பா.ஜ., அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
பா.ஜ., அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
ADDED : ஏப் 16, 2024 07:22 AM

புதுச்சேரி : பா.ஜ., அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
மத்தியில் ஆட்சி செய்த காங்., அரசு, புதுச்சேரி சுதந்திரம் பெற்ற பின்பு யூனியன் பிரதேச அங்கீகாரத்தை வழங்கியது. தற்போது புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும். ஆனால், மாநில அந்தஸ்தை மோடி தர மாட்டார். முதல்வர் ரங்கசாமியும் அதை செய்யமாட்டார். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் மோடி அரசு புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் காங்., ஆட்சி அமைந்ததும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறப்போம். ஆலைகள், கூட்டுறவு நிறுவனங்களை திறந்து வேலை வழங்குவோம்.
பா.ஜ., அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. கவர்னர்கள் மூலம் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் தொல்லை கொடுக்கிறது. புதுச்சேரியிலும் கவர்னர் மூலம் காங்., அரசுக்கு தொல்லை தந்தனர். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி மூலம் நிர்வாகத்தை நடக்கவிடாமல் மோடி நெருக்கடி தருகிறார்.
தமிழக அரசு மக்கள் நலத் திட்ட கோப்புகள் அனுப்பினால், கவர்னர் ரவி அதனை முடக்கி தாமதப்படுத்தி ஜனநாயக படுகொலை செய்வதுடன், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி ஆட்சியை கவிழ்ப்பது, விலைக்கு வாங்கி முடக்குவது மோடி அரசின் வேலை. புதுச்சேரி முதல்வரால் சுயமாக செயல்பட முடியவில்லை. தலையாட்டி பொம்மை போல பா.ஜ.,வினர் கைக்குள் வைத்துள்ளனர். நாராயணசாமியை போல் ரங்கசாமிக்கும் தொல்லை தொடர்கிறது.
சோனியா, கார்க்கே ஆகியோரை ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை என மோடி கூறுகிறார். காங்., கட்சியினர் ராமருக்கு எதிர்ப்பானவர்கள் என்பது போல் குற்றச்சாட்டு கூறி திசை திருப்புகிறார். நாங்கள் ராமரை மதிக்கிறோம். காங்., தலைவர்களாக சோனியா, கார்க்கேவை அவர் அழைக்கவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த கடவுளையும் வழிபடலாம். இந்த கடவுளை தான் வழிபட வேண்டும் என வற்புறுத்த முடியாது.
கடன் வாங்கி விட்டு, இந்திய பொருளாதாரம் வளர்ந்து விட்டதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் காலியாக உள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஒரே ஆண்டில் நிரப்புவோம். ஆண்டுதோறும் மகளிர் உரிமத்தொகை ரூ. 1 லட்சம் தருவோம். அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், மதிய உணவுத்திட்ட பணிபுரிவோர் வாங்கும் ஊதியத்தை இரட்டிப்பு ஆக்குவோம்.
மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய வாஷிங் மெஷின் வைத்துள்ளனர். வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிபணிந்தால் தங்களிடம் உள்ள வாஷிங் மெஷினில் போட்டு துாய்மை செய்து விடுகின்றனர். அதுபோல், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.வில் சேர்ந்தால் துாய்மையானவர்களாக மாற்றப்படுகின்றனர்.
மோடி அரிச்சந்திரன்போல் பேசினாலும் பா.ஜ., ஊழலில் திளைத்துள்ளது. விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பு இல்லாமைக்கு மோடி தான் காரணம். நமது அரசியலமைப்பு சட்டம், சுயமரியாதைக்காக காங்., கட்சி வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

