ADDED : ஏப் 28, 2026 06:02 PM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் கலெக்டர் அலுவலக மெயிலில் ‘செவ்வாய் கிழமை நண்பகல் வெடிகுண்டு வெடிக்கும். பொதுமக்கள், பணியாளர்கள் வெளியேற வேண்டுமென’ கடிதம் வந்தது. இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தது. அதன்பேரில், வெடிகுண்டு மற்றும் செயலிழிப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மில்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கலெக்டர் அறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அறை, கூட்டம் நடக்கும் அரங்கம், பொதுமக்கள் அமரும் இருக்கைகள் என, கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் மதியம் 1:30 மணி முதல், போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் ‘பீட்’ உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். 3:15 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் 3:30 மணி முதல், 4:15 மணி வரை சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது. இச்சம்பவம் குறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கடலுார் கோர்ட், தலைமை தபால் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
